Published : 21 Nov 2019 07:07 AM
Last Updated : 21 Nov 2019 07:07 AM

நிலவில் தரையிறக்க முடியாமல் போனது ஏன்?: சந்திரயான்-2 லேண்டர் கட்டுப்பாட்டு கருவியில் கோளாறு- உயர்மட்ட ஆய்வுக் குழு தகவல்

சி.பிரதாப்

‘‘நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கல லேண்டரின் கட்டுப்பாட்டுக் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நிலவில் தரையிறக்க முடியவில்லை’’ என்பது உயர்மட்ட ஆய்வுக் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம்தேதி விண்ணில் செலுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதிதிட்டமிட்டபடி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் கடைசிநிமிடத்தில் பாதை மாறி வேகமாகசென்று நிலவில் விழுந்தது. எனினும் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர்தொடர்ந்து செயல்பட்டு பல படங்கள், தகவல்களை அனுப்பி வருகிறது.

எனினும் லேண்டர் நிலவில் தரையிறங்காமல் போனதற்கு ஆய்வு செய்யஇஸ்ரோவின் திரவ உந்துசக்தி எரிபொருள் ஆய்வு மைய இயக்குநர் வி.நாராயணன் தலைமையில் விஞ்ஞானிகள் அடங்கிய தேசிய உயர்மட்டஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, ஆர்பிட்டர் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படங்கள், திட்ட செயலாக்கப் பணி மதிப்பீடுமற்றும் நாசா உட்பட இதர விண்வெளி மையங்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டு விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்து கடந்த வாரம் விண்வெளி ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானி கள் நேற்று கூறியதாவது:லேண்டர் தரையிறங்கும்போது நிலப்பரப்பில் இருந்து 35 முதல் 5 கி.மீ. உயரத்தை வந்தடையும் வரை லேண்டரின் திசை, வேகம் உட்பட எல்லாம் சரியாக இருந்தன. அதன்பின், லேண்டரின் கட்டுப்பாட்டு கருவி மென்பொருளில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் புவியில் உள்ள மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மென்பொருள் பழுதுக்கு நிலவின் புறச்சூழல்கள் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், நிலவின்மாதிரி தரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான முறை லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்துள்ளோம். அப்போது எந்தச் சிக்கலும் எழவில்லை. இதையடுத்து எதிர்கால திட்டங்களில் இத்தகைய தவறுகள் ஏற்படாத வண்ணம் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

நிலவு பற்றிய முழுமையான ஆய்வுக்கு தென்துருவத்தில் தரையிறங்க வேண்டியது அவசியம். இதற்காக சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவைச் சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலன்களை மட்டும் அனுப்ப முடிவாகியுள்ளது. லேண்டர், ரோவர் சாதனங்கள் எரிபொருள் மூலம் இயங்கும் வகையிலும், மேம்படுத்தபட்ட தொழில்நுட்பவசதிகளுடனும் தயாரிக்கப்பட உள்ளன. முந்தைய தவறுகளின் மூலம் கிடைத்துள்ள அனுபவங்களைக் கொண்டு கவனத்துடன் இத் திட்டத்தை கையாள்வோம். சந்திரயான்-2போல அல்லாமல் விரைவாக நிலவைச் சேரும்படியும் விண்கலம் தயாரிக்கப்படும். அடுத்த ஆண்டு இறுதியில் விண்கலம் செலுத்தப்படும்.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x