Last Updated : 20 Nov, 2019 04:50 PM

 

Published : 20 Nov 2019 04:50 PM
Last Updated : 20 Nov 2019 04:50 PM

சமூக வலைதளங்களால் கடும் பாதிப்புக்கு ஆளாகும் சராசரிக்கும் கீழான மாணவர்கள்: ஆய்வில் தகவல்

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் சராசரிக்கும் கீழான மாணவர்களின் படிப்புத் திறன் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வேக்ஃபீல்ட் என்பவரின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் முதலாமாண்டு மாணவர்கள் அனைவரும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஆய்வில் அவர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் நேரமும் அவர்களின் படிப்புத் திறனும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு:

''ஒவ்வொரு மாணவரும் தினந்தோறும் சராசரியாக 2 மணிநேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இது அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை நீள்கிறது. படிப்பில் சராசரிக்கும் கீழான மாணவர்கள் ஃபேஸ்புக்கை அதிக நேரம் பயன்படுத்துவதால், அவர்களின் படிப்புத் திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே சுயக் கட்டுப்பாடு மற்றும் கவனம் குறைவாக இருக்கும் அவர்கள், ஃபேஸ்புக்கில் அதிக நேரம் இருப்பதால் படிப்பின் மீதான கவனச் சிதறல் அதிகமாகிறது. இதனால் தேர்வில் அவர்கள் தோற்கவும் வாய்ப்புகள் உருவாகின்றன. அதே நேரத்தில், நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஃபேஸ்புக் பயன்பாடு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மாணவர்கள் சராசரி அளவான 2 மணிநேரத்தை விட கூடுதல் 1 மணிநேரம் (3 மணிநேரம்) ஃபேஸ்புக்கில் செலவிடும்போது 10% வரை மதிப்பெண் குறைகிறது. அதாவது, 100-க்கு 10 மதிப்பெண்கள் குறைகின்றன.

அதேபோல உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சராசரியாக 19 வயது மாணவர்களின் செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. அந்த ஆய்விலும் சராசரிக்கும் கீழான மாணவர்கள், சமூக வலைதளப் பயன்பாட்டால் படிப்பில் நாட்டத்தை இழப்பது நடந்தது. அதேநேரத்தில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள், படிப்பையும் சமூக வலைதளங்களையும் திறம்படக் கையாண்டனர்.

இதனால் சராசரிக்கும் கீழான மாணவர்கள் படிக்கும்போது போன், சமூக வலைதளம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, படிப்பில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அதேபோல கல்வியாளர்களும் மாணவர்களிடம் பேசுவது, அசைன்மென்டுகளை அனுப்புவது, கற்பித்தல் நடைமுறைகள் ஆகியவற்றை சமூக வலைதளங்கள் வழியாக மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x