Last Updated : 20 Nov, 2019 01:40 PM

 

Published : 20 Nov 2019 01:40 PM
Last Updated : 20 Nov 2019 01:40 PM

15 கொள்ளுப் பேரன்,பேத்திகளுடன் வாழும் 105 வயது பாட்டி: கேரளாவில் 4-ம் வகுப்பு தேர்வு எழுதி உற்சாகம்

96 வயதில் தேர்வு எழுதிய கார்த்தியாயினி அம்மா : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

6 குழந்தைகள், 15 கொள்ளுப் பேரன்கள், பேத்திகளுடன் வாழும் 105 வயது பாட்டி, கேரளாவில் எழுத்தறிவு இயக்கத்தின் சார்பில் 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வை எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் நகரைச் சேர்ந்த பாகிரதி அம்மா தனது 105 வயதில் தேர்வு எழுதியுள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை இழந்தபின், 2 மகன்கள், 4 மகள்களையும் வளர்த்துப் படிக்கவைத்து திருமணம் செய்து கொடுத்த நிலையில், இப்போது கல்வி கற்கும் ஆர்வத்தில் பாடம் படித்து வருகிறார்.

சிறுவயதிலேயே தனது தாய், தந்தையை இழந்த பாகிரதி அம்மா தனது உடன்பிறந்தவர்களை வளர்த்துவிட்டபின் திருமணம் செய்து கொண்டார். 30 வயதுக்குள் 2 மகன்கள், 4 மகள்களுக்குத் தாயானார்.

பாகிரதி அம்மாவின் வாழ்க்கை நல்லபடியாகச் சென்ற நேரத்தில் திடீரென கணவரைப் பறிகொடுத்தார். இதனால், 4 மகள்கள் உள்பட 6 குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு அவரின் தோள்களில் விழுந்தது. அனைத்துக் குழந்தைகளையும் வளர்த்துப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தார்.

தற்போது 6 பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் என மொத்தம் 15 பேரன்கள், கொள்ளுப் பேரன்களுடன் பாகிரதி அம்மா வாழ்ந்து வருகிறார்.

ஆனால், 105 வயதாகியும், இவரின் குரல், பார்வையில் எந்தவிதமான குறைபாடும் இல்லை. தெளிவாகப் பேசவும், பாடவும் முடிகிறது. சிறுவயதில் கற்கமுடியாத கல்வியை தற்போது ஆர்வத்துடன் கற்று வருகிறார்.

கேரள அரசின் மாநில எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தற்போது பாகிரதி அம்மா கல்வி கற்று வருகிறார். இதுகுறித்து எழுத்தறிவு இயக்கத்தின் இயக்குநர் பி.எஸ். ஸ்ரீகலா கூறுகையில், " மாநிலத்திலேயே மிக அதிக வயதில் கல்வி கற்று வருபவர் பாகிரதி அம்மா தான். தற்போது அவருக்கு 105 வயதாகிறது" எனத் தெரிவித்தார்

எழுத்தறிவு இயக்கத்தின் அதிகாரி வசந்த குமார் நிருபர்களிடம் கூறுகையில், " பாகிரதி அம்மா தனது முதுமையின் காரணமாக எழுதுவதில் அவருக்குச் சிரமம் இருக்கிறது. 3 பாடங்களில் தேர்வு எழுத 3 நாட்கள் ஆனது. சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் ஆகியவற்றில் தேர்வு எழுத அவருக்குச் சிரமம் இருந்தது. இதனால், அவரின் இளைய மகள் அவருக்கு உதவியாக எழுதினார்.
105 வயதாகியும் பகீரதி அம்மாவின் நினைவு கூர்மையாக இருக்கிறது. பார்வையிலும் எந்தவிதமான குறையும் இல்லை, நன்றாகப் பாடுகிறார். பகீரதி அம்மா தனது 9-வது வயதில் 3-ம் வகுப்போடு தனது கல்வியை முடித்துக்கொண்டார். தற்போது 4-வது வகுப்புத் தேர்வு எழுதியது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது" எனத் தெரிவித்தார்.

105 வயதாகும் இவர் இதுவரை கேரள அரசிடம் இருந்து நிதியுதவியாக விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என எதையும் பெறவில்லை. அவருக்கு இதுவரை ஆதார் கார்டு கூட வழங்கப்படவில்லை. பாகிரதி அம்மாவுக்கு ஆதார் கார்டு, முதியோர் ஓய்வூதியம் வழங்க அவரின் குடும்பத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

இதற்கு முன் கேரள மாநிலத்தில் மிக அதிகமான வயதில் தேர்வு எழுதியவர் கார்த்தியாயினி அம்மா. இவர் தனது 96-வது வயதில் தேர்வு எழுதினார். கேரள அரசின் அக்‌ஷராலக்ஸம் என்ற எழுத்தறிவு இயக்கத்தின் மூலம் படித்து 100 மதிப்பெண்களில் 98 மதிப்பெண்கள் பெற்றார் கார்த்தியாயினி அம்மா.

ஆலப்புழா மாவட்டம் சேப்பாட் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாவின் கல்வி கற்கும் ஆர்வத்தைப் பார்த்த முதல்வர் பினராயி விஜயன் அஷ்ஷாராலக்ஸம் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x