Published : 20 Nov 2019 11:58 AM
Last Updated : 20 Nov 2019 11:58 AM

குட்டிக் கதை 14: பெற்றோர் சண்டை- பிள்ளைக்குக் கேடு!


கமலாவும் விமலாவும் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள். இருந்த போதிலும் இருவருக்கும் எப்போதும் சண்டை வரும். கமலாவின் மகள் கவிதாவும், விமலாவின் மகள் வினிதாவும் ஒரே பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தனர்.

கவிதாவும் வினிதாவும் தோழிகளாக இருக்க ஆசைப்பட்டனர். ஆனால் இரு குடும்பத்திற்கும் சண்டை இருந்ததால் அவர்களின் பெற்றோர் அவர்கள் நட்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்று காலையில் தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது சின்ன விஷயத்திற்காக கமலா, விமலாவிடம் சண்டை போட்டாள்.

“ஏம்மா, சின்ன விஷயத்துக்குக்கூட நீ ஏன் விமலா ஆன்ட்டிகிட்ட சண்டை போடற? அவங்க நம்ம பக்கத்து வீட்டுலதானே இருக்காங்க, ஏதாவது அவசரம்னா அவங்க தானே உதவுவாங்க” என்று கவிதா கேட்டாள்.

“அவ என்ன பேச்சு பேசறா தெரியுமா? அவ எனக்கு எதிரி. அதனால எந்த பிரச்சனை வந்தாலும் அவகிட்ட போய் நிக்க மாட்டேன் தெரிஞ்சிக்க, இனி அவளை பத்திப் பேசறத நிறுத்து” என்றாள் கமலா.

ஒரு வாரம் கழிந்தது.

அன்று இரவு 11 மணிக்கு திடீரென்று கவிதாவின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. கமலாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ‘ஓ’ என்று ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள்.

திடீரென்று விமலாவும் அவளது கணவரும் வந்து ‘என்ன?’ என்று கேட்டனர்.

“என்னன்னு தெரியல விமலா, சாப்பிட்டு முடிச்சதும் நல்லாதான் பேசிட்டு இருந்தார். தூங்கவும் ஆரம்பிச்சார். திடீர்ன்னு நெஞ்சு வலியால துடிக்கறார்” என்று கூறி அழுதாள்.

அதற்குள் விமலாவின் கணவர் ஒரு ஆட்டோவைக்கூட்டி வந்தார். வினிதா ஃபிளாஸ்க், போர்வை, தண்ணீர் ஆகியவற்றை ஒரு பையில் போட்டுக்கொண்டு வந்தாள்.

விமலாவும் அவள் கணவரும் கமலாவின் கணவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

மருத்துவர்கள் உடனடியாக ஐ.சி.யு.வில் சேர்த்து சிகிச்சை ஆரம்பித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு டாக்டர் வெளியே வந்தார்.

“பயப்படாதீங்க, சரியான நேரத்துக்குக் கூட்டிட்டு வந்ததால அவரைக் காப்பாத்த முடிஞ்சது, இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சி போய்ப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

கமலாவின் கண்களில் கண்ணீர்.

“என்னை மன்னிச்சிடு விமலா, நான் உன்கிட்ட எவ்வளவோ சண்டை போட்டு இருக்கேன். ஆனா அதையெல்லாம் மறந்து தக்க சமயத்தில் நீயும் உன் கணவரும் மட்டுமில்லாமல் உன் மகளும் வந்து உதவி செய்திருக்கீங்க. இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன், ரொம்ப ரொம்ப நன்றி” என்று கூறினாள்.

“நாம எப்பவும் சண்டை சச்சரவு இல்லாமல் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும். அப்போதான் நமக்கு பிரச்சனை வரும்போது மத்தவங்க உதவி செய்வாங்கன்னு நானும் இப்போ புரிஞ்சிகிட்டேன், இனி நாம எப்பவும் ஒற்றுமையா இருக்கலாம்” என்று விமலாவும் கூறினாள்.

நடந்ததையெல்லாம் கேட்ட கவிதாவிற்கும் வினிதாவிற்கும் ரொம்ப மகிழ்ச்சி. ஆசையுடன் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தனர்.

நீதி: பெற்றவர்கள் பிறருடன் போடும் சண்டையால் பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x