Published : 20 Nov 2019 09:51 AM
Last Updated : 20 Nov 2019 09:51 AM

விளையாட்டை தெரிந்துகொள்ளுங்கள் - செஸ் பாக்ஸிங்

பி.எம்.சுதிர்

மாணவர்களே... உங்கள் அனைவருக்கும் செஸ் போட்டியைப் பற்றித் தெரிந்திருக்கும். பலர் செஸ் போட்டிகளில் ஆடியும் இருப்பீர்கள். இதேபோல் குத்துச்சண்டை போட்டிகளைப் பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அதே நேரத்தில் செஸ் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் செஸ் பாக்ஸிங் (செஸ் குத்துச்சண்டை) போட்டியைப் பற்றி தெரியுமா? போட்டியாளர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்தகுதியை சோதிக்கும் வகையிலான செஸ் பாக்ஸிங் போட்டிகள் 1992-ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தகாமிக்ஸ் எழுத்தாளரான பிராய்ட் எக்வாட்டர் என்பவர் 1992-ம் ஆண்டில்ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டார். விளையாட்டு வீரர்களின் உடல் மற்றும் அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் 2 பிரிவுகளிலும் போட்டி நடப்பதுபோல் இந்த காமிக்ஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த காமிக்ஸால் ஈர்க்கப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர், செஸ் பாக்ஸிங் போட்டிக்கு உருவம் கொடுத்தார்.

இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் போட்டியில் 6 சுற்றும், குத்துச்சண்டையில் 5 சுற்றும் மோதவேண்டும். இதில் ஒவ்வொறு சுற்றிலும் செஸ் போட்டி 4 நிமிடங்களைக் கொண்டதாகவும், குத்துச்சண்டை போட்டி 3 நிமிடங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் போட்டியாளர்களுக்கு ஒரு நிமிடம் ஓய்வு அளிக்கப்படும். இதில் செஸ் போட்டியில் தோற்பதைத் தவிர்க்க எந்த வீரராவது காய் நகர்த்தலில் தாமதம் செய்தால், அவருடைய புள்ளிகள் கழிக்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அதற்கு முன் குறைந்தது 50அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளிலாவது பங்கேற்றிருக்க வேண்டும். 1992-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் செஸ் பாக்ஸிங் ஆடப்பட்டு வந்தாலும், சர்வதேச அளவிலான முதல் செஸ் பாக்ஸிங் போட்டி 2003-ம் ஆண்டில்தான் நடந்தது.

நெதர்லாந்து குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் உலக செஸ் பாக்ஸிங் அமைப்பு இணைந்து ஏற்படு செய்த இந்த போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபிங் வெற்றிபெற்றார்.

உலகெங்கிலும் தற்போது 150 தொழில்முறை ஆட்டக்காரர்கள் செஸ் பாக்ஸிங் போட்டிகளில் ஆடி வருகிறார்கள். பெர்லின், லண்டன் உட்பட பல்வேறு நகரங்களில் இந்த விளையாட்டுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன.

கொல்கத்தாவைச் சேர்ந்த தற்காப்பு கலை வீரரான மோண்டு தாஸ் என்பவர்தான் இந்த விளையாட்டை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். 2011-ம் ஆண்டில் செஸ் பாக்ஸிங் ஆர்கனைசேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைத் தொடங்கிய இவர், பல வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இப்போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்ற முதல் வீரர் ஷைலேஷ் திரிபாதி ஆவார். மும்பையைச் சேர்ந்த இவர், 2012-ம் ஆண்டில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x