Last Updated : 20 Nov, 2019 08:26 AM

 

Published : 20 Nov 2019 08:26 AM
Last Updated : 20 Nov 2019 08:26 AM

உலக சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோவை மாணவர்

உலக சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மாணவர் பொ.தமிழரசு வுடன், தலைமை ஆசிரியை பிரபாவதி, பயிற்சியாளர் பவித்ரா பிரியதர்ஷினி.

கோவை

உலக சிலம்பாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார், கோவை மாணவர் தமிழரசன்.

மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் நகரில், உலக அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில், இந்தியா சார்பில் கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பொ.தமிழரசன் கலந்து கொண்டு, சிலம்பாட்டத்தில் உட்பிரிவுகளான சுருள்வாள் வீச்சில் தங்கப் பதக்கமும், சிலம்பாட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

தனது சாதனை குறித்து தமிழரசன் கூறியதாவது:கோவை சுகுணாபுரம் பகுதியில் பெற்றோர் பொன்ராஜ்-புவனேஸ்வரிஆகியோருடன் வசித்து வருகிறேன். எனது பெற்றோர் கூலி தொழிலாளிகள்.

4-ம் வகுப்பு முதல் சிலம்பம் கற்று வருகிறேன். எனது பயிற்சியாளர் பவித்ரா பிரியதர்ஷினி எனக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுக்கிறார்.

அதனால் தான் என்னால் சிலம்பம் கற்றுக்கொள்ள முடிந்தது. இதேபோல் அவருடைய சகோதரர் விஜய் அபிமன்யூவும் பயிற்சி அளிக்கிறார்.

எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியர்கள் அசார், விஜயலட்சுமி மற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். இதற்கு முன் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். நான் வெளிநாடுகளுக்குச் சென்றுவர அதிகம் செலவாகிறது.

ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள் மற்றும் உதவும் உள்ளம் கொண்டவர்கள் செய்யும் உதவியால்தான் என்னால் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடிகிறது. வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க எனக்குதமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அவரது பயிற்சியாளரான சட்டக்கல்லூரி மாணவி பவித்ரா பிரியதர்ஷினி கூறும்போது, "சிறு வயதில் சிலம்பம் கற்றுக்கொண்டு பல நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று வருகிறேன்.

நமது பாரம்பரிய கலையை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம். குறிப்பாக மாணவர்கள் மூலமாக இக்கலையை வளர்த்தெடுக்க விரும்பி, விருப்பம் உள்ளவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகிறேன்.

நடந்து முடிந்த உலகசிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் எனது மாணவர்கள் 16 பேர் கலந்து கொண்டு 17 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்கள் வென்றனர். தங்கம் வென்ற தமிழரசன் 7 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியில் சேர்ந்தார். கடுமையாக பயிற்சி மேற்கொள்வார். மிகவும் ஈடுபாடு உடையவர்" என்றார்.

கோவை சட்டக் கல்லூரியில் பி.எல். இறுதியாண்டு மாணவியான, பவித்ரா பிரியதர்ஷினி சிலம்பாட்டத்தில் சர்வதேச வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x