Published : 19 Nov 2019 06:06 PM
Last Updated : 19 Nov 2019 06:06 PM
வாய் பேச முடியாத, காது கேட்காத பஞ்சாப் இளைஞருக்கு சிறப்பு தேசிய விருது வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்க உள்ளார்.
யஷ்வீர் கோயல் என்னும் 20 வயது இளைஞர் பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியைச் சேர்ந்தவர். விளையாட்டு வீரரும் ஐடி தொழில்நுட்ப வல்லுநருமான யஷ்வீர், பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். காது கேட்காதவர்.
கடந்த செப்டம்பர் மாதம் ஜலந்தரில் நடைபெற்ற 10-வது காது கேளாதோருக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட யஷ்வீர் கோயல், ஒற்றையர் பிரிவில் வெண்கலமும் இரட்டையர் பிரிவில் தங்கமும் வென்றார்.
இரண்டு பதக்கங்களைப் பெற்றதால், மாநில பாட்மிண்டன் அணிக்குத் தேர்வாகியுள்ளார். கடந்த ஆண்டிலும் பஞ்சாப் சார்பில் போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுதாரணமாக விளங்கும் பிரிவின் கீழ் கோயலுக்கு சிறப்பு தேசிய விருது வழங்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் 3-ம் தேதி டெல்லியில், கோயலுக்கு 'மாற்றுத்திறனாளிக்கான அதிகாரமளித்தல் விருது 2019' வழங்கப்பட உள்ளது.