Published : 19 Nov 2019 09:58 AM
Last Updated : 19 Nov 2019 09:58 AM

கோவையில் நடந்த யோகாசன போட்டியில் அரசு பள்ளி மாணவர் குருபிரசாத் முதலிடம்

கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகாசன போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை

கோவையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட யோகாசன போட்டியில், புரவிபாளையம் அரசு பள்ளி மாணவர் குருபிரசாத் முதலிடம் பிடித்தார்.

கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான யோகாசன போட்டி, கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:மாணவர் பிரிவில் 177 புள்ளிகள் பெற்ற புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.குருபிரசாத் முதலிடமும், 174 புள்ளிகள் பெற்ற சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.வி.சிவமணி இரண்டாமிடமும், 159 புள்ளிகள் பெற்ற கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.தயானந்த் மூன்றாமிடமும் பெற்றனர்.

மாணவிகள் பிரிவில் 180 புள்ளிகள் பெற்ற ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.சஸ்டிகா முதலிடத்தையும், சின்ன தடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.முத்துலட்சுமி இரண்டாம் இடத்தையும், செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.ஹரிஷ்ணா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

இது குறித்து பள்ளி கல்வித்துறையினர் கூறும்போது, 'ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் புதுமையான செயல்பாடுகள் என்ற திட்டத்தின் கீழ், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், யோகா ஒலிம்பியாட் என்ற போட்டிகள் நடத்த பள்ளிகல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும்உடல் மற்றும் மனவளம் ஒருங்கிணைந்து செம்மையாகச் செயல்பட வைப்பது இதன் நோக்கமாகும்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு 10 புள்ளிகள், ஏதாவது இரு ஆசனங்கள் செய்வதற்கு தலா 20 புள்ளிகள், விருப்ப ஆசனங்கள் செய்வதற்கு தலா 20 புள்ளிகள் என மொத்தம் 50 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் மட்டுமே இப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன' என்றார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித்திட்ட அலுவலர் கே.கண்ணன் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x