Published : 19 Nov 2019 08:36 AM
Last Updated : 19 Nov 2019 08:36 AM

எதை படித்தால் புத்திசாலி?

கோப்புப்படம்

மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகள்தாம் உயர்ந்தவை. கலை, அறிவியல் படிப்புகள் அந்தஸ்தில் குறைந்தவை. ஆகையால் பள்ளியில் பிளஸ் 1-ல் எப்படியாவது உயிரியல் அல்லது கணினி அறிவியல் பாடப் பிரிவில் சேர்ந்துவிட வேண்டும்.

அப்படியானால்தான் நம்மைப் புத்திசாலி என்று உலகம் அங்கீகரிக்கும். படிப்பு வராதவர்கள் மட்டுமே வரலாறு, பொருளாதாரம், தமிழ் இலக்கியம் போன்ற கலை பாடப் பிரிவுகளில் சேர்வார்கள். இப்படி கல்வி தொடர்பாக ஏகப்பட்ட ‘மூட’ நம்பிக்கைகள் நம்மிடையே உலாவுகின்றன.

நடப்பு செய்திகளில் ஒன்றை படித்தால் இந்த மாயை கலைந்து தெளிவு பிறக்கும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ‘ஆரோக்கிய இதழியல்’, ‘ஆரோக்கிய தொடர்பியல்’, ‘தொடர்பியல் ஆட்சியியல்’ ஆகிய மூன்று புதிய முதுநிலை பட்டப் படிப்புகளை அறிமுகப்படுத்த இருப்பதாக இந்திய மக்கள்செய்தித் தொடர்பியல் கல்வி நிறுவனம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்த முடியாது. ஆனால், விஷயம் அதுவல்ல. இத்தனை நாட்களாக, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளைப் படிப்பதற்கு பெயர்தான் மருத்துவப் படிப்பு. இவற்றுக்கும் சமூகவியல், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற படிப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கான சேதி இது.

மருத்துவத்தையும் கலை பாடங்களையும் இணைத்து கற்றுத் தரும் இந்த படிப்புகளை ஏதோ புதிதாக முளைத்த கல்வி நிறுவனம் கொண்டுவரவில்லை. ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகிய இயற்கை மருத்துவங்களை முன்னிறுத்தும் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மக்கள்செய்தி தொடர்பியல் என்ற புகழ்பெற்ற அரசுக் கல்வி நிறுவனம் இதைச் செய்யவிருக்கிறது.

ஆகையால், இனியேனும் பாடப்பிரிவுகளில் உயர்வு தாழ்வு பாராமல் இருக்க நாம் பழக வேண்டும். இதில் மாணவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. பெற்றோரையும் சொல்வதற்கில்லை. ஆசிரியர்கள்தாம் இது குறித்த அறிவையும் தெளிவையும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x