Published : 19 Nov 2019 07:16 AM
Last Updated : 19 Nov 2019 07:16 AM

மாணவர்களை தத்தெடுக்கும் ரஷ்ய கிராமப் பள்ளிகள்

ப்ரோடிரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ளது ப்ரோடி கிராமம். இங்குகடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை.

மாணவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்து வருவதால் இங்குள்ள பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இந்த சிக்கலுக்குத் தீர்வுகாணும் விதமாக ப்ரோடி கிராமப் பள்ளிகளும் ஊர் மக்களும் ஒன்றுகூடி ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். ஏழை மாணவர்களை தத்தெடுத்து கல்வி கற்பிப்பதே அந்தத் திட்டம்.

இந்த பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சராசரியாக மாதத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.7, 460 செலவாகும். இந்த தொகையை ப்ரோடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களில் பாதிப்பேருக்கு பள்ளிகளும் ஊர் மக்களும் சேர்ந்து செலுத்துகிறார்கள்.

மாணவர்களை தத்தெடுக்கும் முறை பற்றி ரஷ்ய அறிவியல் அகாடமியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் சமூகவியலாளர் வெரா கலிந்தபயிவா கூறுகையில், “குழந்தைகளைபள்ளியில் இருந்து நிறுத்துவதால் அவர்களுக்கும் கல்வி தடைப்பட்டுப்போகிறது, பள்ளிகளும் மூடப்படுகின்றன. இதனால் நாளடைவில் இந்த கிராமங்களே மறைந்துபோகும் அபாயம் உள்ளது.

இதற்கு தீர்வு காண அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி முடிவெடுத்தனர். இதன் வாயிலாக மாணவர்களுக்கும் கல்வி உறுதி செய்யப்படுகிறது, பள்ளிகளும் காப்பாற்றப்படுகின்றன, அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களின் பணிக்கும் உத்தரவாதம் கிடைத்துவிடுகிறது” என்கிறார்.

சோவியத் ஒன்றியம் தகர்ந்த பிறகு ஏற்பட்ட கடுமையான பொருளாதார சரிவினால் 1991-ல் இருந்துரஷ்யாவின் மக்கள்தொகை கணிசமாகக் குறைந்து வருகிறது. கடந்த 28 ஆண்டுகளில் அந்நாட்டின் மக்கள்தொகையில் 50 லட்சம் குறைந்துவிட்டது. இந்த சிக்கலைச் சமாளிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ரஷ்ய குடிமக்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கைகளை ரஷ்ய அரசு எடுத்த பிறகும் இந்நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை.

26 ஆயிரம் ரஷ்ய பள்ளிகள்

மாஸ்கோ போன்ற பெருநகரங்களில் மக்கள்தொகை அதிகரித்து வந்தாலும் ரஷ்ய கிராமங்களில் மக்கள்தொகை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. இதன் பின்விளைவாக கடந்த 20 ஆண்டுகளில் 26 ஆயிரம்ரஷ்யப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.

அவற்றில் 22 ஆயிரம் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகள். இவற்றில் ப்ரோடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளிகளும் அடக்கம். ஒரு காலத்தில் 15 பள்ளிகள் செயல்பட்டு வந்த இந்த கிராமத்தில் தற்போது 3 மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தப் பள்ளிகளும் மூடப்பட்டுவிடாமல் காப்பாற்றவே ஊர் மக்களும் பள்ளிகளும் ஒன்றுகூடி அங்குப் படித்துவரும் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கான கல்விச் செலவை பகிர்ந்துவருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x