Published : 18 Nov 2019 07:28 AM
Last Updated : 18 Nov 2019 07:28 AM

டெல்லியில் 500 கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல் தமிழக பள்ளிகளில் சூரியசக்தி மின்சார திட்டம்?

சிஜி தாமஸ் வைத்தியன்

உலக நாடுகளில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேலாக வெப்பம் அதிகமாகவும், 60 நாட்கள் மழை காலமாகவும் இருக்கின்றன. இங்கு அதிக நாட்கள் வெப்பநிலை அதிகமாக இருப்பதால், இந்தியாவில் சூரியசக்தி மூலம் மின்சாரம் ஆண்டு முழுவதும் தயாரிக்க முடியும்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள 500-க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள், பிஎஸ்இஎஸ் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியில் சூரியசக்தி மின்தகடுகளை அமைத்துள்ளன.

இதுகுறித்து, பிஎஸ்இஎஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:பிஎஸ்இஎஸ் டிஸ்காம் நிறுவனம் (பிஒபிஎல் மற்றும் பிஆர்பிஎல்) டெல்லியில் 65 மெகாவாட் கொண்ட1,800-க்கும் மேற்பட்ட சோலார்தகடுகளை பொருத்தி உள்ளது.

அவற்றில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி பள்ளிகள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களில் இந்த சோலார் தகடுகள் மூலம் 20,400 கிலோவாட் திறன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கின்றன.

ஒரு பள்ளியோ அல்லது கல்லூரியோ ஆண்டுக்கு சுமார் 230 வேலை நாட்களை கொண்டுள்ளன. ஆனால், ஆண்டுக்கு 310 முதல் 320 நாட்களுக்குத் தேவையான மின்சாரத்தை இதன்மூலம் உற்பத்தி செய்ய முடியும். அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எங்கள் நிறுவனத்துக்கே வழங்கலாம். அதற்கான தொகை ஆண்டு இறுதியில் மின் கட்டணம் போக மீதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு 30 சதவீதம் மானியம் வழங்குகிறது. பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள், வீடுகள் போன்ற இடங்களில் 1,000 முதல் 5,000 வாட்ஸ் மின்சாரம் உருவாக்கக் கூடிய சூரிய சக்தி தகடுகளை கொண்ட சாதனத்தை நாம் அமைத்து கொள்ளலாம். இதற்கு ரூ.60,000 வரை செலவாகும். இந்த சூரிய சக்தி சாதனம் மூலம் ஒரு நாளைக்கு 4 முதல் 4.5 யூனிட் மின்சாரத்தை தயாரிக்கலாம். இதற்காக 30 சதவீதம் (ரூ.18 ஆயிரம் வரை) மத்திய அரசு மானியம் கொடுக்கிறது.

மேலும், தங்களுக்கு தேவையான மின்சாரம் போக அல்லது வேலை நாட்கள் அல்லாத காலத்தில் கிடைக்கும் மின்சாரத்தை மின் வாரியத்துக்கோ அல்லது தனியார் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யலாம்.

தற்போது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளை போல், தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளில் சூரிய சக்தி மின்தகடுகளை அமைப்பது மூலம், மின்சார தேவையை 50 சதவீதம் குறைக்கலாம்.

இந்த சூரிய சக்தி தகடுகளை, கல்வி நிறுவனங்களின் காலி இடங்களிலோ, கட்டிடத்தின் மேற்கூரைகளிலோ பதிக்கலாம். முதல் முறை அமைக்கும் செலவு அதிகமானாலும், அதனால், மின்கட்டண செலவு கணிசமாகக் குறையும். இந்த மானியத்தை பெற அருகில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம்.

தமிழகத்தின் பெரிய கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்த மின்சார செலவு மட்டும், மாதம் ஒரு கோடியை தாண்டுவதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, பல்கலை.யில் விரைவில் சூரிய சக்தி தகடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விவசாய பம்ப் செட்டுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு 90 சதவீதம் மானியம் வழங்குவது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தினால் அதன் மூலம் அதிக விலைக்குமின்சாரம் வாங்குவது மற்றும் மின்வாரியத்தில் ஏற்படும் நஷ்டத்தை அரசுதவிர்க்க முடியும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x