Published : 16 Nov 2019 04:08 PM
Last Updated : 16 Nov 2019 04:08 PM
உலகிலேயே டைபாய்டு காய்ச்சலுக்கு முதன் முறையாக தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது.
அந்த நாட்டில் உள்ள சிந்து மாநிலத்தில் டைபாய்டு காய்ச்சலில் ஏராளமானோர் ஆண்டுதோறும் உயிரிழப்பதால், அங்கு முதன்முதலில் இந்த தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம்செய்துள்ளது
கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சல்மோனெல்லா டைபி பாக்டீரியா எனப்படும் சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சல் பரவியது. சிந்து மாநிலத்தில் இந்த சூப்பர் பக் டைபாய்டு காய்ச்சலால் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் 20 சதவீதம் அதிகரித்தது.
இதையடுத்து சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சலுக்காக "தி டைபாய்ட் கான்ஜுகேட் வாக்ஸின்"(டிசிவி) தடுப்பூசியை பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த தடுப்பூசி அறிமுக நிகழ்ச்சி கராச்சி நகரில் நேற்று நடந்தது.
இதில் பிரதமர் இம்ரான் கானின் சுகாதாரத்துறை தனிப்பட்ட உதவியாளருமான ஜாபர் மிர்சா, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்ரா பாஸல் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜாபர் மிர்சா கூறுகையில், " தொடக்கத்தில் டைபாய்டு காய்ச்சலுக்கான தடுப்பூசியை சிந்து மாநிலத்திலும், அதன்பின் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகளுக்கு போடுவதற்கு விரிவுபடுத்துவோம்.
கடந்த 2017-ம் ஆண்டில் 63 சதவீத டைபாய்டு நோயாளிகளில் 70 சதவீதம் இறந்தவர்களில் 15 வயதுக்கு கீழ்பட்டவர்கள்தான் அதிகம். குழந்தைகளின் மரணத்தைத் தடுக்க இந்த டிசிவி தடுப்பூசி மிகவும் உதவும் என்று நம்புகிறோம்.
ஜெனிவா நகரைச் சேர்ந்த காவி தடுப்பூசி நிறுவனத்தின் உதவியுடன் கடந்த இருவாரங்களாக தடுப்பூசி பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.சிந்து மாநிலத்தில் மட்டும் 9 மாதங்கள் முதல் 15 வயதுக்குள் இருக்கம் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. கராச்சியில் 47லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
டிசிவி தடுப்பூசி 9 மாதம் முதல் 15 வயதுக்குட்டவர்கள் வரை ஆண்டுக்கு ஒருமுறை போடும் தடுப்பூசியாகும். குறைந்தவிலையில், அதிகதிறன்வாய்ந்த தடுப்பூசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.