Published : 15 Nov 2019 05:29 PM
Last Updated : 15 Nov 2019 05:29 PM

19% இந்தியர்கள் காலையில் மேற்கத்திய உணவை நாடுகின்றனர்: ஆச்சரியப்படுத்தும் ஆய்வு

புதுடெல்லி

19 சதவீத இந்தியர்கள் காலையில் மேற்கத்திய உணவுகளைச் சமைப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை ஆய்வு நிறுவனமான இப்சாஸ், 'வளர்ந்துவரும் இந்திய உணவுப் பழக்கம்' என்ற தலைப்பில் ஆய்வொன்றை நடத்தியது. இந்தியா முழுவதும் உள்ள 14 நகரங்களில் இருந்து 1000 குடும்பங்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில் கண்டறியப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

''இந்தியர்கள், மேற்கத்திய உணவுகளை மாதம் ஒருமுறையாவது வீட்டிலேயே சமைத்து உண்கின்றனர். அந்த உணவில் மேற்கத்திய சாஸ், கெச்சப்புகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள இந்தியர்கள், இந்திய உணவுகளில் மேற்கத்திய கலாச்சாரத்தைப் புகுத்தி சாப்பிடுகின்றனர். மேற்கத்திய உணவுகளை எளிதில் சமைத்துவிட முடிவதால், அவற்றை அதிகம் விரும்புகின்றனர். காலை, இரவு என இரு வேளைகளில் மேற்கத்திய உணவுகள் சமைக்கப்படுகின்றன. எனினும் காலையில் 19% பேர் மேற்கத்திய உணவை நாடுகின்றனர்.

எளிதில் சமைக்க முடிகிறது (68% பேர் தெரிவித்துள்ளது), குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ள நன்றாக இருக்கிறது (57%), குழந்தைகள் விரும்பி உண்கின்றனர் (53%), விருந்தினர்களுக்குப் பரிமாற ஏதுவாக உள்ளது (46% பேர் தெரிவித்துள்ளது) என்ற காரணங்களுக்காக மேற்கத்திய உணவுகளை இந்தியர்கள் விரும்புகின்றனர்.

எனினும் பண்டிகைகள் மற்றும் குடும்ப விழாக்களின்போது மேற்கத்திய உணவுகள் சமைக்கப்படுவதில்லை. அரிசி உணவுக்கு மாற்றாக இவை இருப்பதாக 70% இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளுமே மேற்கத்திய உணவை உட்கொள்ள அதிகம் விரும்புகின்றனர். இதனால் மேற்கத்திய உணவு நுகர்வோர்களில் 10-ல் 7 பேர், 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

அதிகத் தகவல் நுகர்வு, நேரக் குறைபாடு, மாறிவரும் வாழ்க்கை முறை ஆகியவற்றால் இந்த மாற்றம் நடந்துள்ளது''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x