Published : 15 Nov 2019 12:54 PM
Last Updated : 15 Nov 2019 12:54 PM

தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் உதகை பள்ளி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

ஆந்திராவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில், உதகை பள்ளி மாணவி ஷேரன் மரியா வெண்கலப் பதக்கம் வென்றார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நேசரத் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ஷேரன் மரியா. தடகள வீராங்கனையான இவர், 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.

கடந்த வாரம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில், 200 மீ. ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடமிடம் பிடித்து, வெண்கலப்
பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

இதனை அடுத்து வரும் நவ. 21-ம் தேதி திருப்பதியில் தொடங்கும் தேசிய ஜூனியர் தடகளப் போட்டிக்கும் தயாராகி வருகிறார். இது குறித்து மாணவி ஷேரன் மரியா கூறியதாவது:

ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்றேன். சென்னையை சேர்ந்த ரித்திகா, நிஹாரிக்கா, பொன் சிவபிரியா ஆகியோருடன் தமிழக அணியில் இடம்பெற்று, 100x4 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பெற்றேன். இதேபோல கடந்த 2018-ல் திருப்பதியில் நடந்த ஜூனியர் தேசிய தடகளப்போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் தங்கமும், 2017-ம் ஆண்டு 100 மீ. ஓட்டத்தில் வெண்கலமும் வென்றேன்.

எனது வெற்றிக்கு பயிற்சியாளர் இமானுவேல் கிளார்க் உறுதுணையாக இருக்கிறார். தடகளத்தில் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இவ்வாறு அவர் கூறினார். விளையாட்டு அதிகாரி பாராட்டு இவரது தந்தை ரொசாரியோ ஜஸ்டின் ராஜா திருவண்ணாமலையில் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

தாய் ஜூலியட் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி இயக்குநராக பணிபுரிகிறார். தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவி ஷேரன் மரியாவை நீலகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயச்சந்திரன் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x