Published : 15 Nov 2019 12:43 PM
Last Updated : 15 Nov 2019 12:43 PM

செய்திகள் சில வரிகளில்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு 

இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் நடைபெறும் 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க கடந்த புதன்கிழமை பிரேசில் வந்தடைந்தார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினை நேற்று சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் நாங்கள் இருநாட்டு உறவு குறித்து முழு மதிப்பீடு நடத்தினோம். நெருக்கமான இருதரப்பு உறவுகளால் இரு நாடுகளின் மக்கள் பயனடைவார்கள்.

இருதரப்பு உறவு வளர்ந்து வருகிறது. மே மாதம் 9-ம் தேதி ரஷ்யாவின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்துள்ளார் புதின். நான் புதினைச் சந்திப்பதற்கான மற்றொரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா பிரதமர் மோடி ட்விட்டரில் மரியாதை

புதுடெல்லி

சுதந்திரப் போராட்ட வீரரும் நாட்டின் முதல் பிரதமருமான ஜவாஹர்லால் நேரு 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். இவர் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 1964-ம் ஆண்டு மே மாதம் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

இவரது 130-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நம் நாட்டின் முன்னாள் பிரதமரான பண்டிதர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெல்லி சாந்தி வனத்தில் உள்ள நேருவின் நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x