Published : 15 Nov 2019 12:05 PM
Last Updated : 15 Nov 2019 12:05 PM

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புகைப்பட வாழ்த்து அட்டை!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் நேற்று வழங்கப்பட்டன. 'சர்வீஸ் டூ சொசைட்டி' என்னும் தனியார் அமைப்பு சார்பில் இவை அளிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நேற்று (நவ. 14) இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து 132 அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அங்கு படிக்கும் 10 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து 'சர்வீஸ் டூ சொசைட்டி' அமைப்பின் நிறுவனரும் துபாய் வாழ் தமிழருமான ரவி சொக்கலிங்கம் கூறும்போது, ''இதுவரை 57 அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் புத்திக் கூர்மையுடன் இருக்கின்றனர். ஆனால் அங்கீகாரத்துக்கும் ஊக்குவித்தலுக்கும் அவர்கள் ஏங்குகின்றனர் என்பது புரிந்தது.

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வாழ்த்து அட்டைகளை வழங்க முடிவெடுத்தோம். அதைக் குழந்தைகள் தினத்தில் வழங்கி கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டோம். ஆசிரியர்களின் உதவியுடன் இது மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 10,000 அரசுப் பள்ளிக் குழந்தைகளை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.

தங்களுக்கான வாழ்த்து அட்டைகளை விழிகள் விரிய, கண்டுகளித்த குழந்தைகளின் மகிழ்ச்சியான முகங்கள் இன்னும் கண்களுக்குள்ளேயே நிற்கின்றன. அதன் மூலம் கிடைத்த பேரானந்தத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

மொத்தத்தில் இந்த வருடக் குழந்தைகள் தினக் கொண்டாட்டம், இரட்டிப்பு மகிழ்வாய் மலர்ந்தது'' என்று ரவி சொக்கலிங்கம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x