Published : 15 Nov 2019 11:44 AM
Last Updated : 15 Nov 2019 11:44 AM

மணிக்கு 14 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழப்பு: யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல்

நிமோனியா நோயால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழந்து வருவதாக யுனிசெப் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிமோனியா நோய் என்பது பாக்ட்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதலில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

பின்னர் நுரையீரல்களில் சீழ் பிடித்து, திரவம் சேர்ந்து கொள்ளுவதால் உயிரிழப்பு ஏற்படும். குழந்தைகள் நலனுக்காக உலக அளவில் செயல்படும் யுனிசெப் அமைப்பின் சார்பில் ‘சேவ் தி சில்ட்ரன்' அமைப்பு நிமோனியா நோய் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அதில், இந்தியாவில் நிமோனியாவால் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பின் துணை இயக்குநர் ராஜேஷ் கன்னா கூறுகையில், “இந்தியாவில் 2018-ல் மட்டும் 5 வயதுக்கு குறைவான 1,27,000 குழந்தைகள் நிமோனியாவால் இறந்துள்ளது. உலக அளவில் நிமோனியாவால் இறக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். கடந்த 2018-ல் நைஜீரியாவில் 1,62,000 குழந்தைகளும், பாகிஸ்தானில் 58,000, காங்கோவில் 40 ஆயிரம், எத்தியோப்பியாவில் 32 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

போதிய ஊட்டச்சத்து கிடைக்காததே இதற்குக் முக்கிய காரணமாகும். வீடுகளுக்குள் இருக்கும் 22 சதவீத காற்று மாசினாலும், 27 சதவீத வெளிப்புற காற்று மாசினாலும் குழந்தைகள் இறப்பது தொடர்கதையாகியுள்ளது. உலக அளவில் ஆண்டு தோறும் 8 லட்சம் குழந்தைகள் நிமோனியா நோயால் இறக்கின்றனர். அதாவது நாள் ஒன்றுக்கு
2 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர்.

இந்தியாவில் 2017-ல் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 14 சதவீதம் நிமோனியாவால் என்று தெரியவந்துள்ளது. உலக அளவில் இதில் 2-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. 2016-ல் ஒருவரின் சுகாதாரச் செலவுக்காக இந்தியா 16 அமெரிக்க டாலர்களைச் (ரூ.1,600) செலவிட்டதாகத் தெரியவந்துள்ளது” என்றார். இதுகுறித்து யுனிசெப் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா போர் கூறும்போது, “ நாள் ஒன்றுக்கு உலகம் முழுவதும் 2,200 குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள்) நிமோனியாவால் இறந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நோயை குணப்படுத்தவும் முடியும், வராமல் தடுக்கவும் முடியும். இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலக நாடுகள் ஒன்று சேரவேண்டும். இதற்காக போதிய மருந்துகள், கருவிகளுக்காக முதலீடு செய்யவேண்டும்" என்றார். 2018-ம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட 4,37,000 குழந்தைகள் டயரியாவாலும், 2,72,000 குழந்தைகள் மலேரியாவாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x