Published : 15 Nov 2019 11:38 AM
Last Updated : 15 Nov 2019 11:38 AM

‘எமிஸ்' இணையதளத்தில் மாணவர் விவரங்களை துல்லியமாக பதிவுசெய்ய வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை

‘எமிஸ்' இணையதளத்தில் மாணவர்களின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை கூறினார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், வரும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது.

இதன்படி கோவை மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு மேநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங்கள், பள்ளி கல்வித்துறையின் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்) பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், வீட்டு முகவரி, தொடர்பு எண், இனம் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இத்தகவலின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு, இலவச பாட புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். பெயர்களின் ஆங்கில எழுத்துகளை சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும். இதேபோல் முதலெழுத்து (இனிசியல்) சரியாக இருக்க வேண்டும்.

ஏனெனில் எஸ்எஸ் எல்சி-யில் பதிவு செய்வது போன்றுதான், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் இடம் பெறும். இந்த விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கி, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் காண்பித்து சரிபார்த்து, அவர்களிடம் கையொப்பம் பெற்று வைக்க வேண்டும். மாணவர்களின் பிறந்த
தேதியை பிறப்புச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ்களின் அடிப்படையில் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும். தவறுகள், பிழைகளின்றி துல்லியமாக மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கோவை, பேரூர், எஸ்எஸ் குளம், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளி
களின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x