Published : 15 Nov 2019 09:51 AM
Last Updated : 15 Nov 2019 09:51 AM

நிலவில் மீண்டும் லேண்டரை மெதுவாக தரையிறக்க திட்டம்; சந்திரயான்-3 அடுத்த ஆண்டு விண்ணில் பாயும்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

பெங்களூரு

நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில், சந்திரயான் - 3 விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் என்று பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் நேற்று தெரிவித்தனர்.

நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், ரூ.978 கோடியில் சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர், நிலவின் தரைப்பகுதிக்கு செல்லும் விக்ரம் லேண்டர் மற்றும் நிலவின் தரையில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் ரோவர் ஆகிய 3 அதிநவீன கருவிகள் இடம்பெற்றன.
பூமியில் இருந்து 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டரை மெதுவாக இறக்கும் பணியை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர்.

ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. மேலும், நிலவின் தரையில் மெதுவாக தரையிறங்குவதற்கு (சாப்ட் லேண்டிங்) பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்)செயலிழந்தது தெரிய வந்தது. எனினும், ஆர்பிட்டர் மட்டும் வெற்றிகரமாக நிலவை சுற்றி வந்து படங்கள், தகவல்களை அனுப்பி வருகிறது.

நிலவின் தென்துருவப் பகுதியில் லேண்டரை மெதுவாக தரையிறக்கும் நிகழ்வுதான் சவாலாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திட்டமிட்டபடி லேண்டர் பத்திர மாக தரையிறங்கி, அதிலிருந்து ரோவர் தனியாகப் பிரிந்து நிலவின் மேற்பரப்பில் நகர்ந்துவிட்டால் விண்வெளி வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியிருக்கும்.

மேலும், ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும். எனினும், நிலவில் விண்கலத்தை தரையிறக்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

சந்திராயன்-2 விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக விழுந்து சாய்ந்துள்ள புகைப்படங்களை ஆர்பிட்டர் அனுப்பியது. இதையடுத்து சந்திரயான் - 3 திட்டத்தை வடிவமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ்.சோமநாத் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் சந்திரயான்-3 லேண்டர், ரோவர், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான நடைமுறைகள் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் அறிக்கை தயாரித்து அளிப்பார்கள். சந்திரயான் - 3 திட்ட அறிக்கைக் கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கிவிடும். இந்த முறை ரோவர், லேண்டர் மற்றும் தரையிறங்கும் இயக்கங்கள் குறித்து விஷயங்கள் மிகவும் கவனத்தில் கொள்ளப்படும். சந்திரயான் - 2வில் இருந்த தவறுகள் இந்த முறை திருத்திக் கொள்ளப்படும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும். சந்திரயான் - 3-ல் உருவாக்கப்படும் லேண்டரின் கால்கள் மிகவும் பலமுள்ளதாக, எந்த சூழலிலும் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இவ்வாறு இஸ்ரோ மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

விக்ரம் லேண்டரில் நடந்தது என்ன?

விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்காமல் போனதற்கான காரணங்களை ஆராய கல்வியாளர்கள், இஸ்ரோ நிபுணர்கள் அடங்கிய தேசிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக இஸ்ரோவின் திரவ எரிவாயு ஆய்வு மையத்தின் இயக்குநர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கமிட்டி பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்து, விக்ரம் லேண்டர் தரையிறங்க முடியாமல் போனதற்கான பல காரணங்களை, தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளது.

இதுகுறித்து விரிவான அறிக்கையையும் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை விரைவில் விண்வெளி ஆய்வு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், அந்த அறிக்கை விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x