Last Updated : 14 Nov, 2019 01:10 PM

 

Published : 14 Nov 2019 01:10 PM
Last Updated : 14 Nov 2019 01:10 PM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களைத் தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யும் பெண்: நர்ஸ் பணியை உதறிவிட்டு சேவை

மதுரை

போக்சோ சிறப்புச் சட்டம் குறித்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதுரை திருநகரைச் சேர்ந்த பெண் ஒருவர். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் பார்த்துவந்த செவிலியர் பணியைத் துறந்துவிட்டு சேவை செய்து வருகிறார்.

மதுரை திருநகரைச் சேர்ந்தவர் கே.ஜோதி. இவர், கிரேஸ் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக நாளுக்கு, நாள் அதிகரிக்கும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, அதைத் தடுக்கும் நோக்கில் தனது செவியலர் பணியைத் துறந்து, இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்கிறார்.

பள்ளிக்கூடங்கள் அளவில் இருந்து, இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்புத் திட்டத்தைத் தயாரித்து, பணியாற்றுகிறார். வாரத்திற்கு இரண்டு பள்ளிகள் வீதம் மாதம் 8 பள்ளிகளுக்கு நேரில் சென்று இலவசமாக இந்தப் பிரச்சாரம் செய்கிறார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் தேடிக் கொடுக்க, சட்ட ரீதியான சில பணிகளையும் அவர் மேற்கொள்கிறார்.

இதுபற்றி ஜோதி கூறியது:

"பொதுவாக சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபவர்களில் நெருங்கிய உறவினர்களே அதிகம். வெளியில் தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்பதால் மறைத்து விடுகின்றனர். ஒருசில இடங்களில் தனிமை, ஏழ்மையைப் பயன்படுத்தி குற்றச்செயல் புரிவோர் தப்பித்துக் கொள்கின்றனர்.

பெரும்பாலும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்பது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத சூழல் உள்ளது. ஒருவேளை குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறும்போது, உறவினர்களாக இருந்தால், பெற்றோரே மறைத்து விடுகின்றனர்.

இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படும் குழந்தைகள், சிறுமிகளுக்கு முதலில் தங்களது உடல் பகுதியில் தொடுதல் பற்றிய விழிப்புணர்வுத் தேவை இருக்கிறது.

இதற்காகவே பள்ளிகள் நோக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டேன். இதன்படி, 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவி, மாணவியருக்கு உடல் பகுதியில் நல்ல, தவறான நோக்கில் தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்.

6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சிறப்புச் சட்டமான ‘போக்சோ’ சட்டப் பிரிவில் புகார் அளித்தல், தண்டனை விவரங்கள் மற்றும் வளர் இளம் பருவம் பற்றி மாற்றம் குறித்தும் கற்றுத் தருகிறோம்.

இதுவரை நூற்றுக்கணக்கான பள்ளிகளில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். காவல்துறை, பள்ளி நிர்வாகம் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளேன்".

இவ்வாறு ஜோதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x