Published : 14 Nov 2019 09:55 AM
Last Updated : 14 Nov 2019 09:55 AM

மாணவர்களின் கைவண்ணத்தில் குழந்தைகள் தினம்!

குழந்தைகள் நாளை முன்னிட்டு தமிழக பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளை ‘வெற்றிக்கொடி’ நடத்தியது. ‘இன்றைய உலகில் உடனடியாக மாற்ற வேண்டிய பிரச்சினை எது?’ என்ற தலைப்பில் கட்டுரைகளும், ‘எனது கனவு அல்லது குறிக்கோள்!’ என்ற தலைப்பில் ஓவியங்களும் வரவேற்கப்பட்டன.

இந்த போட்டிகளில் 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையிலான தமிழக பள்ளி மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான சிறப்பான கட்டுரைகளும் ஓவியங்களும் எங்களை வந்தடைந்தன. மாணவர்களின் கலைத்திறனும் சிந்தனை ஆற்றலும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவற்றில் அதி அற்புதமான 6 கட்டுரைகளையும் ஓவியங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் மாணவர்களே!

நேரு மாமாவும் குழந்தைகள் நாளும்!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீதும் ரோஜா மலர்கள் மீதும் மிகுந்த பிரியம் கொண்டவர் நேரு. நாளைய குடிமகன்களான நாட்டின் எதிர்காலமான குழந்தைகளை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்திட வேண்டும் என்றார் நேரு. குழந்தைகளிடம் அவர் செலுத்திய அபரிமிதமான அன்பினால் அவர் வாஞ்சையோடு, ‘நேரு மாமா’ என்ற அழைக்கப்பட்டார்.

இந்நாளின் தனித்துவம்

குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நாளாக குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் பிரதமரானார் நேரு. அப்போது அவர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நன்மைக்காகப் பல திட்டங்களை முன்னெடுத்தார். அவற்றில் கல்விக்கு முதலிடம் கொடுத்தார். ஐஐடி என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஏய்ம்ஸ் எனப்படும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ஐஐஎம் என்ற இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர் நேரு தான். இதுமட்டுமின்றி இலவச ஆரம்பக் கல்வித் திட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்க பள்ளியில் பால் உட்பட இலவசமாக உணவு வழங்கும் திட்டங்களை கொண்டுவந்தார்.

குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என்று பறைசாற்றி அதற்கான செயல்திட்டங்களை கொண்டுவந்த நேருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடைய பிறந்த நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

முதன்முதலில் எப்போது கொண்டாடப்பட்டது?

1964-ம் ஆண்டுக்கு முன்புவரை இந்தியா உட்பட பல உலக நாடுகளில் நவம்பர் 20 குழந்தைகள் நாளாகக் கொண்டாட பட்டுவந்தது. ஏனென்றால், ஐநா சபை 1953-ல் நவம்பர் 20-ம் தேதியைக் குழந்தைகள் நாளாக அறிவித்தது. ஆகையால், 1959-ல் இந்தியாவில் முதல் குழந்தைகள் நாள் நவம்பர் 20 அன்றுதான் கொண்டாடப்பட்டது. 1964 மே 27 அன்று நேரு காலமானார். அந்த ஆண்டு முதல் நவம்பர் 14 இந்தியாவுக்கு குழந்தைகள் நாளாக மாறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x