Published : 14 Nov 2019 07:38 AM
Last Updated : 14 Nov 2019 07:38 AM

‘பிரிக்ஸ்’ இளம் கண்டுபிடிப்பாளர் விருதுக்குப் போட்டி; இந்தியாவைச் சேர்ந்த பிஎச்.டி ஆய்வாளருக்கு முதல் பரிசு: குறைந்த செலவில் பால் குளிரூட்டும் சாதனம் கண்டுபிடிப்பு

சென்னை

குறைந்த விலையில் பாலை குளிரூட்டும் சாதனம் கண்டுபிடித்த இந்திய மாணவருக்கு 4-வது பிரிக்ஸ்- இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஆனால், பால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தும் குளிரூட்டும் சாதனம் மிக அதிக விலையில் உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை சரிசெய்ய குறைந்த விலையில் பாலை பதப்படுத்தும் குளிரூட்டும் சாதனம் செய்யும் முயற்சியில் பெங்களூருவில் உள்ள ஐசிஏஆர் - தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்.டி படித்து வரும் ரவி பிரகாஷ் ஈடுபட்டார். அதன் விளைவாக, உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே மிகக் குறைந்த விலையில் பாலை குளிரூட்டும் சாதனத்தை கடந்த ஆண்டு கண்டுபிடித்தார்.

இந்த சாதனமானது, மாட்டில் இருந்து கறந்த பாலை, 37 டிகிரிசெல்சியஸில் இருந்து 7 டிகிரி செல்சியஸாக 30 நிமிடங்களில் குறைக்கும். நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனத்தை அவர் உருவாக்கி இருந்தார்.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் நேற்று தொடங்கிய 11-வது பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக, 4-வது பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில், தான் கண்டுபிடித்த சாதனத்துக்காக முதல் பரிசை பெற்றுள்ளார்.

4-வது பிரிக்ஸ்-இளம் கண்டுபிடிப்பாளர் போட்டிக்காக, அறிவியல் மற்றும்தொழில்நுட்பத் துறையால் இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு 21 இளம்கண்டுபிடிப்பாளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் பிஹாரைச் சேர்ந்த ரவி பிரகாஷும் ஒருவர். அவரது கண்டுபிடிப்புதான் இந்தியாவுக்கு முதல் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது.

முதல் பரிசாக, 25,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம்) ரவி பிரகாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஏழை மற்றும் நடுத்தர கிராமப்புற பால் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், குறைந்த விலையில் பால் குளிரூட்டும் சாதனம் கண்டுபிடித்த பிஹாரை சேர்ந்த ரவி பிரகாஷ், உலகளவில் இந்தியாவுக்கு முதல் பரிசை பெற்று தந்துள்ளார்” என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

அதேபோல், தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், “இந்த கண்டுபிடிப்பு அனைத்து வளரும்நாடுகளுக்கும், பால் உற்பத்திக்கு பின்னர் அதன் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்த கண்டுபிடிப்பு ஏழை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும்” என்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு (6-வதுமாநாடு) முதல் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு வருகிறார். 2014ம்- ஆண்டு அவர் கூறுகையில், “தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் ஈடுபாட்டைப் பற்றிய யோசனையை முன்வைத்து, பிரிக்ஸ் மாநாட்டில் இளைஞர்களை ஈடுபடுத்தவும், அவர்களை தொடர்பு படுத்தவும் புதுமையான ஒரு திட்டம் உருவாக்க வேண்டும்” என்று பேசி இருந்தார். அவரது வேண்டுகோள்படிதான் இந்த விருது அறிமுகம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x