Published : 13 Nov 2019 07:28 AM
Last Updated : 13 Nov 2019 07:28 AM

இலவச இணைய சேவை ஆடம்பரம் அல்ல; அடிப்படை மனித உரிமையே!- கேரள மாநிலத்தை உதாரணம் காட்டி அறிக்கை

லண்டன்

இலவச இணைய சேவையானது அடிப்படை மனித உரிமையாகக் கருதப்பட வேண்டும் என்று லண்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு வலியுறுத்தி இருக்கிறது.

2019-ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக கேரளத்தைச் சேர்ந்த 3 கோடியே50 லட்சம் மக்களுக்கு இலவச இணைய வசதியை ஏற்படுத்தி தரவிருப்பதாகவும் இணைய பயன்பாட்டை மனித உரிமையாக கருத வேண்டும்என்றும் கேரள மாநில அரசு அண்மையில் அறிவித்தது. இதை முன்னுதாரணமாக்க காட்டி இருக்கிறார்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள பர்மிங்கம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

அரசியல் தொடர்பான பல்வேறுகருத்து பரிமாற்றமும் உரையாடல்களும் இன்று இணைய வழியில் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது இணையத்தைப் பயன்படுத்தும் வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்களுடைய அரசியல் கருத்துக்களை இணையத்தில் பதிவிடும் நிலை உள்ளது. இந்த நிலை தொடர்வதில் நியாயம் இல்லை என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.

வாழும் உரிமை, சித்திரவதைக்கு உட்படாத உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்வதில் இணையத்துக்கு இன்று முக்கியப் பங்குள்ளது. கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ இது வழிவகுக்கும் என்று ‘அப்ளைட் ஃபிலாசப்பி’ என்ற ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது.

“இனியும் இணையத்தை ஆடம்பரமாகக் கருதுவதற்கில்லை. அது ஓர் அடிப்படை மனித உரிமையாகும். ஆகவே வசதி வாய்ப்பற்றோருக்கும் இடையூறற்ற கண்காணிப்பற்ற இணைய சேவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்” என்று பர்மிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விரிவுரையாளர் மெர்டன் ரெக்லிஜ் தெரிவித்தார்.

இணைய வசதி இருப்பதினாலேயே மனித உரிமைகள் கிடைத்துவிட்டதாக கருதுவதற்கில்லை என்றாலும் அரசாங்களையும் நிறுவனங்களையும் பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கும் சக்தி இந்த ஊடகத்துக்கு உள்ளது.

உயரிய சமூக அந்தஸ்து பெற்றஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் தங்களுடைய குரலை எழுப்ப இணையத்தைப் பயன்படுத்தி ‘மீ டூ இயக்கத்தை’ முன்னெடுத்தது இதற்கான சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x