Published : 12 Nov 2019 05:30 PM
Last Updated : 12 Nov 2019 05:30 PM

ஜெகன்மோகன் ரெட்டிக்கு கல்வி முறை பற்றி போதிய அறிவு இல்லை: பாஜக கண்டனம்

ஜெகன்மோகன் ரெட்டிக்கு கல்வி முறை பற்றி போதிய அறிவு இல்லை என்று பாஜக மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான லங்கா தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. இந்த மாற்றம் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''ஆந்திர மக்கள் எதற்காக ஆங்கில வழிக் கல்வி கற்க வேண்டும்? தெலுங்கு மொழி சரியானதாக இருக்காதா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ''சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த மீடியத்தில் படித்தார்கள்?'' என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான லங்கா தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ''குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மீது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வைத்துள்ள விமர்சனங்கள் தேவையற்றவை. அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம். ரெட்டிக்கு நம்முடைய கல்வி முறை குறித்துப் போதிய அறிவு இல்லை.

வெங்கய்ய நாயுடு நம்முடைய கலாச்சாரத்துக்கும் நாட்டின் பழக்க வழக்கங்களுக்கும் தாய்மொழி எவ்வளவு முக்கியம் என்பதைத்தான் கூறியிருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு மொழியும் அதன் சொந்த அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இங்கு யாரும் அடுத்த மொழி வேண்டாம் என்று மறுக்கவில்லை. ஆனால் அதற்காக தாய்மொழியை ஒதுக்கிவிடக் கூடாது. மாணவர்களுக்கு தெலுங்கு அல்லது ஆங்கில வழிக் கல்வியில் எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்க அனுமதி அளிக்க வேண்டும். ஆங்கில வழிக் கல்வியில் தெலுங்கு கட்டாயமாக்கப்பட வேண்டும். தெலுங்கை விருப்பப் பாடமாக மாற்றிவிடக் கூடாது'' என்று லங்கா தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x