Published : 12 Nov 2019 04:01 PM
Last Updated : 12 Nov 2019 04:01 PM

கரூர் வெள்ளியணையில் இருந்து கொல்கத்தா வரை: அரசுப் பள்ளி அறிவியல் சாதனை 

கொல்கத்தா சர்வதேச அறிவியல் திருவிழா 2019-ல் வெள்ளியணை அரசுப் பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்களின் அறிவியல் ஆய்வுத் திட்டம் பதிவு செய்யப்பட்டது.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழா அண்மையில் நடந்து முடிந்தது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, மாணவர்களிடம் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்துப் பேசினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் விஞ்ஞான் பாரதி சார்பில் நடத்தப்படும் இத்திருவிழா நடத்தப்படுகிறது. 2015-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் அறிவியல் திருவிழாவின் 2019-ம் ஆண்டு கருப்பொருளாக ’அறிவியலில் ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு மூலம் நாட்டைப் பலப்படுத்துதல்’ என்று அறிவிக்கப்பட்டு அது தொடர்பான அறிவியல் கிராமம், இளம் விஞ்ஞானிகள் மாநாடு, விஞ்ஞானிகள் இலக்கியத் திருவிழா, வேளாண் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியலில் சிறந்து விளங்குவோருக்கான சந்திப்பு மற்றும் நேருக்கு நேர், அரசு சாரா அமைப்புகளின் கலந்தாய்வு , உட்பட 28 வெவ்வேறு நிகழ்வுகள் இந்தத் திருவிழாவில் இடம்பெற்றன.

இதில் விஞ்ஞானிகள், விவசாயிகள், அறிவியலாளர்கள், பெண்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் பங்கேற்பு என சுமார் 21,000 பேர் கலந்து கொண்டனர். தமிழத்தில் இருந்து, கரூர் நாடாளுமன்றத் தொகுதி சார்பாக கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல் திருவிழாவில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர் பெ.தனபால் தனது 5 மாணவர்களுடன் இதில் பங்கேற்றார். காவிரியிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை, குழாய் மூலம் வெள்ளியணை ஊர்க் குளத்திற்கு எடுத்து வருவதற்கான அறிவியல் ஆய்வுத் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த வீடியோவை சர்வதேச அறிவியல் திருவிழாவில் கணித மேதை ராமானுஜம் இல்லத்தில் பதிவு எண் 14-ல், வெள்ளியணை மாணவர்கள் ஆங்கிலத்தில் 10 நிமிடங்கள் பகிர்ந்தனர். அதைப் பார்த்த அரங்கம் கரவொலி எழுப்பிப் பாராட்டியது.

எங்கும் அறிவியல், எதிலும் அறிவியல் என மாணவர்கள் அறிவியல் திருவிழாவில் கலந்துகொண்டு அடிப்படை அறிவியலைக் கற்றதுடன், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து வந்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x