Published : 12 Nov 2019 01:15 PM
Last Updated : 12 Nov 2019 01:15 PM

அனைத்து பஞ்சாயத்துகளிலும் மேல்நிலைப் பள்ளிகள்: கருவுறும் வீதத்தைக் குறைக்க பிஹார் முடிவு

கருவுறும் வீதத்தைக் குறைக்க பிஹாரின் அனைத்து பஞ்சாயத்துகளிலும் மேல்நிலைப் பள்ளிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ''மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்துள்ளோம். பிஹாரில் உள்ள கருவுறுதல் வீதத்தைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிஹார் மாணவி இண்டர்மீடியட்டில் தேர்ச்சி பெறும்போது கருவுறுதல் வீதம் 1.6 ஆகக் குறையும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மனதில் கொண்டு இதுவரை 6 ஆயிரம் பஞ்சாயத்துகளில் உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் மீதமுள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் மேல்நிலைப் பள்ளிகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 2005-ல் நான் பொறுப்பேற்றபிறகு 4.3 ஆக இருந்த மாநிலக் கருவுறுதல் வீதம், 3.3 ஆகக் குறைந்தது. அதேபோல 12.5 சதவீதமாக இருந்த பள்ளி செல்லாக் குழந்தைகளின் வீதம் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதற்கு கல்வித் துறையில் அரசு செய்த சீர்திருத்தங்களே முக்கியக் காரணம். புதிய பள்ளிகள் திறப்பு, வகுப்பறைகள் கட்டப்பட்டது, ஆசிரியர்கள் நியமனம் என தொடர் பணிகளை அரசு மேற்கொண்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹார் முழுவதும் 8,500 பஞ்சாயத்துகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்படுவதன் மூலம் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். அதன் மூலம் சிறு வயதிலேயே பெண்கள் திருமணம் செய்வது தடுக்கப்பட்டு, கருவுறுதல் வீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹாரில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெளலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள், 2007-ல் இருந்து சிக்‌ஷா திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. நிதிஷ் குமாரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு 2008-ல் இருந்து சிக்‌ஷா திவாஸ் விழாவைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x