Published : 12 Nov 2019 10:59 AM
Last Updated : 12 Nov 2019 10:59 AM

மாணவர்கள் தண்ணீர் அருந்த தினமும் 3 முறை மணி அடிக்கும் கர்நாடக பள்ளி 

மாணவர்கள் தண்ணீர் அருந்த தினமும் 3 முறை மணி அடிக்கும் கர்நாடக பள்ளி பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மங்களூரு இந்திரபிரஸ்தா வித்யாலயா பள்ளியில்தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஜோஸ் கூறியதாவது, "அண்மைக்காலமாகவே பள்ளிக் குழந்தைகள் சிறுநீரகக் கல் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வீட்டிலிருந்து கொண்டுவரும் தண்ணீர் பாட்டிலை அப்படியே திரும்ப எடுத்துச் செல்கின்றனர். இதனால், தலைவலி, நீர்ச்சத்து குறைபாடு, சிறுநீரகப் பிரச்சினைகள் என பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

அதனால்தான் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காக நாங்கள் தண்ணீர் இடைவேளை வழங்குகிறோம். பள்ளி நேரத்தில் தினமும் மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கிறோம். காலை 10.35 மணி, மதியம் 12 மற்றும் 2 மணியளவில் தண்ணீர் இடைவேளை அளிக்கிறோம். அந்த நேரத்தில் பிள்ளைகள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கிறோம்" என்றார்.

இந்தப் பள்ளியில் எல்கேஜி முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. 1,100 மாணவர்கள் பயில்கின்றனர். முன்னதாக கேரள மாநிலம் கொச்சியில் வாட்டர் பெல் அடிக்கும் முறை அமலுக்கு வந்தது.

குழந்தைகள் தண்ணீர் அருந்துவது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் கூறும்போது, ''பொதுவாக பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பள்ளி வேளையில் தண்ணீர் அருந்தும் பழக்கம் மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதற்கு பெரும்பாலான பள்ளிகளில் உள்ள சுகாதாரமற்ற கழிவறைகளும் காரணம்.

இதனாலேயே பெண் பிள்ளைகள் தண்ணீர் பருகுவதை சுத்தமாகவே தவிர்த்துவிடுகின்றனர். பள்ளிகள் பொறுப்புடன் சுகாதாரமான கழிவறை வசதியைக் கொடுக்க வேண்டும்" என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் வரையறையின்படி ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரமான குடிநீர் இருக்க வேண்டும். சில பள்ளிகள் குடிதண்ணீர் வசதி செய்துகொடுத்தாலும்கூட மாணவர்கள் அதனை ஒழுங்காகப் பயன்படுத்துகின்றனரா என்பதைக் கண்காணிப்பதில்லை. அதேபோல் கழிவறை சுகாதாரத்தைக் கணக்கிலேயே கொள்வதில்லை. இதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சிலர் கோரிக்கை வைக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x