Published : 12 Nov 2019 10:09 AM
Last Updated : 12 Nov 2019 10:09 AM

திசைகாட்டி இளையோர் 6- காலத்தை வென்ற சிறுமியின் காலப் பதிவு

இரா.முரளி

அது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். அதற்கு முன்பாகவே ஹிட்லரின் நாஜிப் படை யூத இன மக்களை எல்லாம் அழித்தே தீரவேண்டும் என்ற வெறியோடு இருந்தது. லட்சக்கணக்கான யூதர்களைச் சிறைப்படுத்தி, சித்திரவதை செய்து கொன்று குவித்தனர். இப்படியாக இனவெறி கொண்ட ஹிட்லர் படையினரால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் விளைவாகச் சொந்த ஊரான ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரைவிட்டு அருகில் உள்ள நாடான நெதர்லாந்துக்கு குடி பெயர்ந்தவர்கள்தாம் ஆனி ஃபிராங்கின் குடும்பத்தினர்.

1929 ஜுன் 12 அன்று பிறந்த ஆனி ஃபிரங்க் நன்றாக எழுதப் படிக்கக் கூடிய சிறுமி. அவளுக்கு பத்திரிகையாளராக வேண்டும் என்ற ஆசை. படிப்பதும், எழுதுவதும் தன்னை அறியாமையில் இருந்து விடுதலை செய்யும் என்று தன் டைரியில் அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.

பிறந்த நாள் பரிசு

ஒரு கட்டத்தில், ஹிட்லரின் படைகள் நெதர்லாந்து நாட்டையும் கைப்பற்றியதால், ஆனி ஃபிராங்க் குடும்பத்தினர் நெதர்லாந்திலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதனால் தாங்கள் செய்துவந்த தொழிலை கைவிட்டு, ஒரு மறைவான கட்டிடத்தில் மறைந்து வாழத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் தந்தையின் உதவியாளர்கள் மூலம் கிடைத்து வந்த செய்தித்தாள்களை ஆனி ஃபிராங்க் தொடர்ந்து படித்து வந்தாள். தான் பெற்ற தகவல்களை எல்லாம் தனக்குப் பிறந்த நாள் பரிசாக கிடைத்த டைரி ஒன்றில் எழுத தொடங்கினாள். தன்னுடைய மனநிலை, உறவுகள் பற்றி எல்லாம் அந்த டைரியில் பதிவு செய்தாள். அத்துடன் நாட்டில் யூதர்கள்எப்படி எல்லாம் ஹிட்லர் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டனர் என்பதையும் விளக்கமாகப் பதிவிட்டாள். இந்தப் பதிவுதான் ஹிட்லரின் கொடுமைகளை உலகம் அறிவதற்கான முக்கிய ஆவணமாக மாறியது.

நாடு மற்றும் வீடு

இலக்கிய நயத்துடனும், வரலாற்றுப் பின்புலத்துடன் அவள் விவரங்களை எழுதினாள். ஒவ்வொரு நாளும் தாங்கள் அனுபவித்த அச்சத்தை பதிவு செய்தாள். போர் விமானங்களில் இருந்து எறியப்பட்ட குண்டுகள், தன்னுடைய வீட்டைச் சுற்றிலும் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு போன்றவற்றை விவரித்து எழுதினாள். உணவுப்பற்றாக்குறையைப் பற்றியும், யூதர்கள்எப்படியெல்லாம் கொடுமை செய்யப்பட்டார்கள் என்பதையும் விளக்கினாள். ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்கு வழியின்றி வீடு புகுந்து திருடர்களான நிலை குறித்தும் குறிப்பிட்டாள்.

சித்திரவதைக்கு ஆளான சிறுமி

மறைந்து வாழ்ந்து வந்த ஆனி ஃபிராங்கின் குடும்பம் 1944-ல் ஜெர்மனிபோலீசாரால் கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டது. அடுத்த நாளே ‘ஆஸ்விட்ஸ்’எனும் கொடுமையான சித்திரவதை முகாமுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர். இங்கு குழந்தைகள் உடனடியாக பிரிக்கப்பட்டு நச்சுப்புகை அறையில் அடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.

இங்கு ஆனி ஃபிராங்க் டைப்பஸ் என்ற நோயினால் தாக்கப்பட்டாள். அவள் தலை மொட்டை அடிக்கப்பட்டு, மெலிந்து நலிந்தாள். அவளைப் போன்றே அவள் தாயும், சகோதரியும் நோய்வாய்பட்டார்கள். குறுகிய காலத்தில் இவர்கள் நோயினால் மடிந்து போனார்கள். அறிவுக் குழந்தையான ஆனி ஃபிராங் எப்படியும் ஒரு நாள் விடுதலை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், நோயின் கடுமையினால் 1945-ல் (15 வயதில்) அதே சித்திரவதை முகாமில் மரித்துப் போனாள். இவர்கள் குடும்பத்தில் எஞ்சியது ஆனி ஃபிராங்கின் தந்தை ஓட்டோ ஃபிராங்க் மட்டுமே.

என்றும் நிலைத்திருப்பவள்

விடுதலைக்குப் பின் அவருக்கு தன்னுடைய மகள் எழுதிய டைரி கிடைத்தது. அதைப் படித்து பிரமித்தவர் கடுமையாக முயன்று ஒரு நூலாக அதை வெளியிட்டார். இந்த டைரிதான் ஆனியை உலகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒன்றாக மாற்றியது. ‘ஆனி ஃபிராங்க்கின் டைரிக்குறிப்பு’ தமிழ் உட்படஉலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.

சிறையில் அடைபட்டிருந்த ஆப்பிரிக்க சுதந்திரப் போராளி நெல்சன் மண்டேலா உட்பட பல தலைவர்கள் ஆனி ஃபிராங்கின் எழுத்துக்கள் தங்களுக்கு மன உறுதியை அளித்ததாக தெரிவித்துள்ளனர். மனித மாண்பைப் போற்றுகின்ற அனைவர் மனதிலும் இன்றும் அந்தச் சிறுமி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x