Published : 12 Nov 2019 09:23 AM
Last Updated : 12 Nov 2019 09:23 AM

இளம் வயது முதலே திட்டமிட்டு படித்தால் வெற்றி உறுதி: மாணவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

தேவகோட்டை

இளம் வயது முதலே திட்டமிட்டு படித்தால் வெற்றி உறுதி என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அறிவுரை கூறினார்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துப் பேசினார். அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவரது பதில்களும் வருமாறு:

மாணவி நதியா : தாங்கள் ஆட்சியர்ஆனதும் மறக்க முடியாத அனுபவம் எது ?

ஆட்சியர் பதில்: மக்களுக்கு சேவை செய்ய நேரடி தொடர்பு கொண்டு ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு பலருக்கும் உதவி செய்ய வேண்டும். இந்த நாள் உங்களை சந்தித்தது கூட சிறப்பான மறக்க முடியாத அனுபவம்தான். நமது பணி சேவை பணி. இதை விரும்பிச் செய்கிறேன்.

மாணவி கீர்த்தியா: மக்கள் குறைதீர்க்கும் நாள் எப்பொழுது நடைபெறும்?

பதில்: ஒவ்வொரு திங்கள்கிழமையும் குறை தீர்க்கும் நாளாகும். அன்றுபொதுமக்கள், பெண்கள், கல்லூரிமாணவர்கள் என அனைவரும்பிரச்சினைகளை மனுவாக கொடுக்கலாம். பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கம் தான் மக்கள் குறை தீர்க்கும் நாளாகும்.

மாணவர் ஜோயல்: ஆட்சியர் பதவியில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பணிசெய்ய வேண்டும்?

பதில்: மாவட்ட ஆட்சியர் பணிக்கு நேரம் காலம் இல்லை. விடுமுறை இல்லை. உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எப்போதும் கடமையோடு செயலாற்றி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். தூங்கும்போது தகவல் வந்தாலும் உடனடியாக செயலாற்ற பக்குவப்பட வேண்டும். நீங்கள் இப்போது இருந்தே உங்களால் முடிந்த சிறு,சிறு உதவிகளை செய்ய பழக வேண்டும்.மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு ஏற்ப சேவை செய்வதே நமது நோக்கமாகும்.

மாணவர் கோட்டையன்: ஆழ்துளை கிணறுகளில் விபத்து இல்லாமல் இருக்க என்ன செய்வீர்கள்?

பதில் : ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .அனைத்து கிராம, நகர நிர்வாகங்களில் கோட்டாட்சியர் என எல்லாராலும் ஆழ்துளை கிணறுகளை மூடவும், விபத்து ஏற்படாமல் இருக்கவும் உறுதி செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவி மெர்சி: பள்ளியில் படித்த அனுபவம் எப்படி சார் ?

பதில்: ஐந்தாம் வகுப்பு வரை ஆவடியிலும், பிறகு பெரம்பூரிலும் படித்தேன். நான் பள்ளியில் படித்த காலத்தில் கவிஞர் கண்ணதாசன் எங்கள் பள்ளிக்கு வந்து பேசினார். அப்போது அவரிடம் நான் கை குலுக்கியது எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சி. கண்ணதாசன் பிறந்த மாதம், தேதியில் நானும் பிறந்தேன். அதே கண்ணதாசன் பிறந்த மாவட்டத்தில் நான் மாவட்ட ஆட்சியராக பணி செய்வதை பெருமையாக கருதுகிறேன்.

மாணவி சிரேகா: சிவகங்கை மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நீர் மேலாண்மையை செம்மைபடுத்தி உள்ளீர்கள். இன்னும் என்னவெல்லாம் இந்த மாவட்டத்திற்கு செய்ய போகிறீர்கள் ?

பதில்: நீர் ஆதாரங்களை பெருக்கி,விவசாயம் செழிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் கிராம பொருளாதாரம் மேம்படும்,

மாணவர் அஜய்: சின்ன வயதிலேயே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்றுநினைத்தீர்களா ?

பதில் : பள்ளி படிப்புக்கு பிறகு விவசாய பட்டதாரி படிப்பு படித்தேன். மண்ணியல் பிரிவில் முதுகலை முடித்தேன்.அரசு துறையின் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றேன். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். உயர் பதவிக்கு வந்தால்தான் மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு உதவி செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டேன். நீங்களும் இளம் வயது முதலே திட்டமிட்டு படித்து போட்டி தேர்வுகள் எழுதினால் வெற்றி உறுதி.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்,தேவகோட்டை வட்டாட்சியர் மேசியாதாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x