Published : 12 Nov 2019 07:45 AM
Last Updated : 12 Nov 2019 07:45 AM

13 ஆயிரம் கேரள பழங்குடியினர் 2 ஆண்டுகளில் எழுத்தறிவிக்கப்பட்டனர்

திருவனந்தபுரம்:

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நலன்கருதி பல்வேறு எழுத்தறிவுத் திட்டங்களை கேரள அரசு முன்னெடுத்து வருகிறது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அம்மாநிலத்தில் உள்ள100 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. குறிப்பாக பழங்குடியினர் அதிகம் வாழும் வயநாடு மற்றும் அட்டப்பாடிப் பகுதிகளில் எழுத்தறிவு இயக்கத்தின் செயல்பாடு தீவிரப்படுத்தப்பட்டது.

இதன் விளைவாக, வயநாட்டில் 7,302 பழங்குடி மக்கள், அட்டப்பாடியில் 3,760 பழங்குடி மக்கள் மற்றும்சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தமக்களையும் சேர்த்து மொத்தம்12,968 பேருக்கு எழுத்தறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா கூறுகையில், “எழுத்தறிவற்ற பழங்குடியினருக்குக் கற்பிக்க அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பயிற்றுநராக மாற்றினோம். எங்களுடைய திட்டம் வெற்றி பெற முதல் காரணம் இதுதான். இந்த திட்டத்துக்கு நல்லவரவேற்பு கிடைத்திருப்பதால், பழங்குடியினர் எழுத்தறிவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவெடுத்து இருக்கிறோம். பழங்குடியின மக்களிடம் பரவலாக காணப்படும் எழுத்தறிவின்மையை ஒழிப்பதே எங்களுடைய இலக்கு” என்றார்.

முழுக்க முழுக்க பெண்களின் ஒத்துழைப்பால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது ‘குடும்பஸ்ரீ’ எழுத்தறிவு இயக்கம்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் பெருமளவில் பழங்குடியினர் வசிக்கும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரளம் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. இங்குள்ள ஆறு தொகுதிகளில் 1, 600 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுத்தறிவு கிடையாது. இது குறித்த கணக்கெடுப்பு பையனூர் காலடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களால் நவம்பர் 12 முதல் நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் வகுப்புக்கு 25 பேர் என்ற விகிதத்தில் 10 வகுப்பறைகள் அரளம் பகுதியைச் சேர்ந்த ஆறு தொகுதிகளில் ஒதுக்கீட்டு செய்யப்படும். அங்கு எழுத்தறிவு இயக்கத்தின் திட்டம் மூன்று மாத காலத்துக்கு நடத்தப்படும் என்று இயக்கத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் மொத்தம் 18 லட்சம் எழுத்தறிவற்றவர்களும், 12 லட்சம் புதிதாக எழுத்தறிவு பெற்றவர்களும் உள்ளனர். குறிப்பாக நகரத்தைச் சேர்ந்த குடிசைப் பகுதிகளிலும் கடற்கரை கிராமங்களிலும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் எழுத்தறிவின்மை அதிகப்படியாக உள்ளது. இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்தவதியூர்காவு என்ற இடத்தில் கடந்த ஞாயிறு அன்று ‘அக்‌ஷராஸ்ரீ’ எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதை 697 பேர் எழுதினர். இவர்களில் 26 வயது முதல் 91 வயதுமூதாட்டிவரை பல்வேறு வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர்கூட இந்தத் தேர்வை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x