Published : 12 Nov 2019 07:41 AM
Last Updated : 12 Nov 2019 07:41 AM

விஸ்வபாரதி பல்கலை.க்கு குடியரசு தலைவர் பாராட்டு

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் உள்ளது விஸ்வபாரதி பல்லைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தை ரவீந்திரநாத் தாகூர் நிறுவினார். இப்பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு வருவது ஒரு புனிதப் பயணம்போன்றது. இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூரும் மகாத்மா காந்தியும் இங்கே அடிக்கடி சந்தித்து உள்ளனர். அந்த இருபெரும் தலைவர்களிடம் இருந்து வாழ்க்கைக்கான லட்சியங்களையும் பாடங்களையும் நாம் பெறலாம்.

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய முக்கிய நபர்களை இந்தபல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே போன்றோர் இங்கு பயின்றவர்கள்தான். நாட்டின் வளர்ச்சியில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பங்கு மகத்தானது. இங்குதான் தாகூர் வாழ்ந்து, பணியாற்றியதுடன் தனது கனவுகளுக்கு உறுதியான வடிவம் கொடுத்தார்.

நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றி நவீன இந்தியாவுக்கு பங்களிப்பு செய்துவரும் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தொடர்ந்து வளர்ச்சி பெற அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x