Published : 12 Nov 2019 07:38 AM
Last Updated : 12 Nov 2019 07:38 AM

வீட்டுக்குள்ளும் வெளியிலும் சுற்றுச்சூழல் சரியில்லை; இந்தியாவில் காற்று மாசு அதிகரிப்பால் இருதய பாதிப்பு: குறைந்த, நடுத்தர மக்களுக்கு ஆய்வில் எச்சரிக்கை

புதுடெல்லி

இந்தியாவில் அதிக அளவிலான சுற்றுப்புற மற்றும் வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசு காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் ஆபத்து அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் (ஐஎஸ்குளோபல்) தலைமையிலான குழு ஒன்று, இந்தியாவில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கு காற்று மாசு காரணமாக ஏற்படும் கரோடிட் இன்டிமா-மீடியா திக்சஸ் (சிஐஎம்டி) - இதய நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பெரியூர்பன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காற்றில் உள்ள நுண்ணிய துகள்களால், அப்பகுதி மக்கள்சிஐஎம்டி குறியீட்டைக் கொண்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, அப்பகுதி மக்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாகும் அபாயம் அதிகமாக உள்ளது.

சிஐஎம்டி மற்றும் லேண்ட் யூஸ் ரிகிரேஷன் (எல்யூஆர்) எனப்படும் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி, வீட்டில் விறகு அடுப்பா அல்லது காஸ் அடுப்பா போன்ற குறிப்புகள் மூலமும் காற்று மாசுபாடு அளவீடு செய்யப்பட்டுள்ளது. காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் சிஐஎம்டி நோய்களுடன் தொடர்புடையவை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர் விறகு அல்லது கரிக்கட்டை (பயோமாஸ்) மூலம் சமையல் செய்து வருகின்றனர். சமைப்பதற்கு பயோமாஸ் எரிபொருளைப் பயன்படுத்தும் நபர்கள் அதிக சிஐஎம்டியைக் கொண்டிருந்தனர். ஆண்களை விட பெண்கள் அதிகநேரம் சமையலறையில் இருப்பதால்,மாசு கலந்த காற்றை சுவாசிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு அதிகசிஐஎம்டி இருந்துள்ளது. வீட்டில்ஏற்படும் காற்று மாசு காரணமாகபெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கூடுதலாக, சுற்றுப்புற மற்றும் உட்புறங்களில் அதிக அளவு காற்றுமாசுபாட்டால் நாடும் பாதிக்கப்படுகிறது. வீட்டில் சமையலறை என்றால், வெளியில் தொழிற்சாலை, வாகன பெருக்கம், குப்பை எரிப்பு, விவசாய கழிவுகள் எரிப்பு என்று காற்று மாசு படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் காற்றின் தரம் 580 அளவை தாண்டி அவசரநிலைக்கு சென்றது. சுமார் 5 நாட்கள் காற்று மாசு அதிகமானதால், டெல்லி மக்கள் அனைவரும் சுவாச முகமுடியை அணிந்தனர். மேலும், ஏராளமானோர் சுவாசக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் தற்போது காற்று வேகம் ஒரு மணி நேரத்துக்கு 20 கி.மீ வீசுவதால் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் காற்றின் வேகம் குறைவாக உள்ளதால், வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை மேலே செல்ல முடியாமல் கீழேயே சுற்றி வருகிறது. இதன் காரணமாக, காற்று மாசு அதிகளவில் கீழேயே தங்கி விடுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிகபட்சமாக காற்று தரம் 300 என்ற அளவுக்கு மோசமானது. இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் நேற்று கூறியதாவது:சென்னையில் 8 இடங்களில் காற்று தரப் பரிசோதனை செய்யப்பட்டதில் 150 முதல் 200 மைக்ரோகிராம் அளவிலேயே மாசு இருந்தது. இந்த மாசு வாகனப் புகை, சாலையில் உள்ள தூசி, கட்டுமானப் பணி, திடக்கழிவுகளை எரிப்பது போன்றவற்றால் ஏற்பட்டது. வாகனப்புகை கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போக்குவரத்து துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

காற்று மாசு என்பது ஒரு நாளில் ஏற்படுவதில்லை. நம்மை சுற்றி நடக்கும் தவறுகளால்தான் ஏற்படுகிறது. எனவே முடிந்தவரை காற்று மாசு ஏற்படும் விஷயங்களை நாம் தவிர்ப்பதே நல்லது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு குறித்து கூடுதல் ஆய்வுகள் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக ஆய்வு அறிக்கை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x