

மதுரை
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச அறிவியல் திருவிழாவில், மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர்.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், விஞ்ஞான பாரதி அமைப்பு சார்பில் கிராமப்புற மாணவர்களையும் இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கவும், அறிவியல் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச அறிவியல் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு சர்வதேச அறிவியல் திருவிழா மேற்குவங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நவம்பர் 5, 6, 7, 8 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றது.
இந்த சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் அசுதோஷ் சர்மா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த சர்வதேச அறிவியல் திருவிழாவில், மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியை வி.ஜெயலட்சுமி தலைமையில் மாணவர்கள் சி.செல்வன், ராம்குமார், சஞ்சய்பாலா, கொடியரசன், முகமது அப்சர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், சர்வதேச அளவில் அறிவியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி, இன்னும் பயணிக்க வேண்டிய தூரம், அறிவியல்துறையில் கிராமப்புற மாணவர்களின் பங்கு, கிராமப்புற மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நவீன கண்டுபிடிப்புகளின் கண்காட்சியும், பல்வேறு கருத்தரங்குகளும் நடந்தன.
இந்த அறிவியல் திருவிழாவில் தமிழகத்திலிருந்து 220 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், ‘அறிவியல் கிராமம்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் தங்களது கிராமங்களுக்கான அறிவியல் மேம்பாடுகள், தேவைகள், அதனை சரி செய்வதற்குரிய அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து கருத்தரங்களில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர்.
இதில், சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சத்திரப்பட்டியை சுகாதாரம், மருத்துவம், அறிவியல் துறையில் மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.