Published : 11 Nov 2019 06:18 PM
Last Updated : 11 Nov 2019 06:18 PM

கேரளாவில் 2 ஆண்டுகளில் எழுத்தறிவு பெற்ற 13 ஆயிரம் பழங்குடிகள்

திருவனந்தபுரம்

ஏராளமான இன்னல்கள், சோதனைகளைத் தாண்டி கேரளாவில் இரண்டே ஆண்டுகளில் 13 ஆயிரம் பழங்குடிகள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இத்தகவலை கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திட்ட இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா கூறும்போது, ''மாநில எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வயநாடு, அட்டப்பாடி உள்ளிட்ட 100 இடங்களில் சிறப்பு எழுத்தறிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன்படி கேரளா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12,968 பழங்குடியின மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதில் வயநாட்டைச் சேர்ந்தவர்கள் 7,302 பேர் ஆவர். அட்டப்பாடியைச் சேர்ந்த 3,760 பேர் தற்போது எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்.

படிக்கத் தெரிந்த பழங்குடியினர் மூலமாகவே நாங்கள் படிப்பறிவு இல்லாதவர்களிடம் எழுத்தறிவு இயக்கத்தை முன்னெடுத்தோம். இதுவே அதன் வெற்றிக்கு முக்கியக் காரணம். படிப்படியாக பழங்குடியின சமூகத்தில் இருந்து கல்லாமையை முழுமையாக நீக்க வேண்டும். இதுவே எங்கள் குறிக்கோள்'' என்றார் ஸ்ரீகலா.

தற்போது கன்னூர் மாவட்டத்தில் உள்ள ஆரலம் பகுதியில் உள்ள படிக்காத பழங்குடியினர் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அங்குள்ள பண்ணைகளில் வசிக்கும் சுமார் 1,600 குடும்பங்களில் பெரும்பாலானோர் படிப்பு வாசனையை அறியாதவர்கள்.

அவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து முடிந்ததும் 10 வகுப்புகள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் தலா 25 மாணவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 3 மாதங்கள் அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.

நகர்ப்புற குடிசைப் பகுதிகள், கடற்கரை ஓரங்களில் வசிப்பவர்கள், பழங்குடியினர் ஆகியோர் வசிக்கும் பகுதிகளில் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகமாக உள்ளதாக கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் தெரிவித்துள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x