Published : 11 Nov 2019 05:43 PM
Last Updated : 11 Nov 2019 05:43 PM

சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த மீடியத்தில் படித்தார்கள்?- ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசம்

சந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த மீடியத்தில் படித்தார்கள் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இந்த மாற்றம் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''ஆந்திர மக்கள் எதற்காக ஆங்கில வழிக் கல்வி கற்க வேண்டும்? தெலுங்கு மொழி சரியானதாக இருக்காதா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்து ஜெகன்மோகன் ரெட்டி பேசியுள்ளார். தேசியக் கல்வி தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அவர், ''நான் சந்திரபாபு நாயுவைக் கேட்கிறேன். சார். உங்களின் மகன் எந்த மீடியத்தில் படித்தார்? உங்களின் பேரன் எதில் படிக்கப் போகிறார்? இதே கேள்வியை நான் வெங்கய்ய நாயுடு மற்றும் பவன் கல்யாணிடமும் கேட்கிறேன்.

ஏழ்மையில் இருக்கும் குழந்தைகளும் சிறப்பாகக் கல்வி கற்க வேண்டும். இன்று உலகளாவிய அளவில் நாம் போட்டி போடுகிறோம். அதற்கு ஆங்கில வழிக் கல்வியில் அவர்கள் படிக்க வேண்டும்.

யாருக்காவது வேலை வேண்டுமெனில் அவர் ஆங்கிலம் கற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் நம்மால் மற்றவர்களுடன் போட்டி போட முடியாது. நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கப் போராடுகிறேன். அதற்காகவே அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது'' என்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x