

புதுடெல்லி
நூலகங்களையும் நூலகர்களையும் கொண்டாடும்விதமாக பள்ளிகளில் இயங்கும் நூலகங்களுக்கு வந்தனா சென் விருது வழங்கும் விழா நேற்று மாலை புதுடெல்லியில் நடைபெற்றது.
'ஒன்அப் நூலகம், புக் ஸ்டுடியோ மற்றும் கற்றல் ஆய்வகம்' என்ற நூலக அமைப்பு ஒன்று இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
நூலகங்களையும் நூலகர்களையும் கொண்டாட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தவும், கற்றல் சூழலை வளர்ப்பதில் சிறந்த நடைமுறைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் சிறந்த பங்களிப்புகளுக்கு குழந்தைகள் உரிமை மற்றும் கற்றல் செயற்பாட்டாளர் வந்தனா சென் பெயரில் விருது வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள உலகத் தரம் வாய்ந்த நூலகங்களை எளிதாக்குவதற்காக, இந்த விருதுகள் வழங்கப்படுவதாக 'ஒன்அப் நூலகம், புக் ஸ்டுடியோ மற்றும் கற்றல் ஆய்வகம்' தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விருது வழங்குவதன் முக்கிய நோக்கம், 'இளம் மாணவர்களின் கற்பனை, சிந்தனைத் திறன்கள், ஒத்துழைப்பு, ஆர்வம் மற்றும் புதுமைகளின் வளர்ச்சியை வளர்ப்பதற்கான ஒரு இடமாக நூலகத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.
நேற்று மாலை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் வந்தனா சென் எவ்வாறு குழந்தைகளின் உரிமைக்காகவும அவர்களது கற்றல் திறன் மேம்படவும் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் சிறந்த குழந்தை நூல்களின் இயம் ஆசிரியையான அவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ள விருது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
வந்தனா சென் விருதுக்காக நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இருந்து 100 பள்ளிகள் விருதுக்கு விண்ணப்பித்தன. இவற்றில் இளையோர் நூலகத்திற்கான விருதை டெல்லியைச் வசந்த் விஹார், ஸ்ரீ ராம் பள்ளி வென்றது. பெரியோர் நூலகத்திற்கான விருதை மும்பையின் கதீட்ரல் மற்றும் ஜான் கோனன் பள்ளிகள் பெற்றன.
விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரபல குழந்தைகளின் எழுத்தாளர் பரோ ஆனந்த் கூறியதாவது:
''மாணவர்கள் இன்றைக்குப் படிப்பதில் நிறைய தடைகள் உள்ளன. எனினும் அதையும் மீறி அவர்களிடம் சிறந்த கற்றல் சிந்தனைத் திறன்களை உருவாக்கிய நூலகங்களைப் பாராட்டுகிறேன்.
நானும் ஒரு நூலகராக இருப்பதால் மாணவர்கள் படிக்கும் ஆர்வத்தில் ஏற்படும் தடைகள், சவால்களை அறிவேன். இந்த விருது அந்த சவால்களை எதிர்கொள்ளும் வலிமையையும் உற்சாகத்தையும் தரும்.
ஒரு புதுமையான நூலகர் அதை எப்படி மாற்ற முடியும், அதில் சிறப்பு கவனம் செலுத்த முடியும் என்பதையும் அனுபவங்களிலிருந்து நான் தெரிந்துகொண்டேன். ஒரு நூலகராக இருப்பதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்''.
இவ்வாறு பிரபல குழந்தைகள் எழுத்தாளர் பரோ ஆனந்த் தெரிவித்தார்.