Published : 11 Nov 2019 12:25 PM
Last Updated : 11 Nov 2019 12:25 PM

ஜேஎன்யூ பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு; கோரிக்கைகளுடன் மாணவர்கள் சங்கம் போராட்டம்

புதுடெல்லி

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டுள்ள நிலையில், மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா இன்று ஏஐசிடிஇ அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, ஜேஎன்யூ மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தாலும் இன்று தீவிரமடைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஏராளமான காவல் துறையினரும் சிஆர்பிஎப் வீரர்களும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் தங்களின் குரலுக்கு வெங்கய்ய நாயுடு செவிசாய்க்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறே கோஷமிட்டு வருகின்றனர். மாணவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா 1972-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது துணைவேந்தராக ஜி.பார்த்தசாரதி இருந்தார். அதைத் தொடர்ந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அப்போதும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதால், பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்குமாறு மாணவர் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் 3-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x