Published : 11 Nov 2019 12:54 PM
Last Updated : 11 Nov 2019 12:54 PM

'பசிப் பார்வை': தெலங்கானா சிறுமியின் கல்விக் கனவை நனவாக்கிய வைரல் புகைப்படம்

இணையதள 'வைரல்' சில நேரங்களில் மிகப் பெரிய நன்மையைச் செய்துவிடுகின்றன. அப்படிப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்தது.

தெலங்கானா மாநிலத்தின் தெலுங்கு செய்தித்தாளான ஈநாடு நாளேட்டில் கடந்த வாரம் ஒரு புகைப்படம் வெளியானது. அந்தப் புகைப்படத்தை அவுலா ஸ்ரீநிவாஸ் என்பவர் எடுத்திருந்தார். அப்புகைப்படத்தில் மோத்தி திவ்யா என்று சிறுமி கையில் ஒரு பாத்திரத்துடன் வகுப்பறைக்கு வெளியே நின்றவாறு உள்ளே நடக்கும் வகுப்பை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பார்.

அந்தப் புகைப்படத்திற்கு 'பசிப் பார்வை' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. வயிற்றுப் பசி, அறிவுப் பசி இரண்டுக்கும் பொருந்தும் வகையில் அத்தலைப்பு வைக்கப்பட்டது.

காரணம் மோத்தி திவ்யா அப்பள்ளியின் மாணவி அல்ல. அங்கு தினமும் மதிய உணவு வேளைக்கு முன்னதாக வரும் மோத்தி மீதமுள்ள உணவைச் சாப்பிடுவதற்காக காத்திருப்பார். அந்தக் குறுகிய நேரத்தில் வகுப்பில் என்ன நடக்கிறது என்பதை வாஞ்சையோடு கவனிப்பது அவரின் வழக்கமாக இருந்துள்ளது.

இணையதளத்தின் வைரலான இப்புகைப்படத்தால் திவ்யாவின் பசிக்குத் தீர்வு கிடைத்துள்ளது.

மோத்தியின் குடும்பப் பின்னணி

மோத்தி திவ்யா தினமும் வந்துசெல்லும் பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது குடிசை வீடு இருக்கிறது. சிறுமியின் தாய் யசோதா, தந்தை லஷ்மண் ஆகிய இருவருமே குப்பைகளைச் சேகரிக்கும் தொழிலாளிகள். இவர்களின் 2-வது மகள் மோத்தி திவ்யா.

இந்தப் புகைப்படம் நாளேட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. புகைப்பட நிருபர் ஸ்ரீநிவாஸ் இது குறித்துக் கூறும்போது, "நான் கடந்த வாரம் குடிமல்காபூருக்கு டெங்கு பற்றிய செய்தி சேகரிக்கச் சென்றேன். அங்குள்ள பள்ளியில் டெங்கு கொசு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதற்காக அப்பள்ளிக்குச் சென்றேன். அங்கே நான் என் வாகனத்தை நிறுத்தும்போது ஒரு சிறு குழந்தை கையில் பாத்திரத்துடன் என்னைக் கடந்து சென்றர். அவர் எங்கே செல்கிறார் என பார்த்துக் கொண்டே நான் என் கேமராவை ஆயத்தப்படுத்தினே. அவர் ஒரு வகுப்பறை வாசலில் நின்றுகொண்டே உள்ளே பார்வையை மட்டும் அனுப்பி ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்தேன். பின்னர் திவ்யாவிடம் பேசியபோதே அவர் அப்பள்ளி மாணவி அல்ல மதிய உணவுக்காக அங்கு வருவது தெரிந்தது" என்றார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த, குழந்தை உரிமைக்காகப் போராடும் மாமிடிபுடி வெங்கராங்கையா தன்னார்வத் தொண்டு நிறுவனமானது அக்குழந்தையின் பெற்றோரை அணுகியுள்ளனர். பின்னர் திவ்யாவை அதே பள்ளியில் சேர்த்தனர். முதல் நாள் ஏக்கத்துடன் வகுப்பறையை எட்டிப் பார்த்த சிறுமி மறுநாள் அதே பள்ளியில் சீருடையுடன் கல்வி கற்கச் சென்றார்.

இது குறித்து திவ்யாவின் பெற்றோரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x