Published : 11 Nov 2019 10:11 AM
Last Updated : 11 Nov 2019 10:11 AM

ஐம்பொறி ஆட்சி கொள் 4- சுயமரியாதை காப்போம்!

முனைவர் என்.மாதவன்

தற்போதைய வங்கதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த காலம் அது. அங்கு 1858-ல் பிறந்த ஒருவர் வசதியும் வாய்ப்பும் இருந்தும் தமது தாய்மொழியிலேயே கல்வி கற்றார். கல்லூரி கல்விக்காக லண்டன் சென்றார். மருத்துவம் பயிலச் சென்றவர் ஒரு கட்டத்தில் அறிவியல் ஆராய்ச்சியில் லயித்தார். நோபல் விஞ்ஞானி ராலேவிடம் பயின்று இந்தியா திரும்பினார். கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இணைப்பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

அந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஆங்கிலேயர்களுக்கும் இந்தியப் பேராசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தில் மிகப்பெரிய முரண்பாடு இருந்து வந்தது. இவர் தமது பணியை மிகவும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்தார். சம வேலைக்குச் சம ஊதியமில்லாததால் தனக்கான ஊதியத்தை வாங்கிக் கொள்ள மறுப்புத் தெரிவித்தார். அதே நேரம் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார். நீதிமன்றமும் இவருக்கு நியாயம் வழங்கியது. வேறு வழியின்றி நீதிமன்றஆணைப்படி அவர் பணியில் சேர்ந்த காலத்திலிருந்து காலமுறை ஊதியத்தினை நிர்ணயித்து கல்லூரி நிர்வாகம் இவருக்கு வழங்கியது.

வாய்ப்பு சிறிது சாதனை பெரிது

இந்த சம்பவத்தில் குறிப்பிடப்படுபவர் வேறுயாருமல்ல. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கண்டறிந்த விஞ்ஞானி ‘சர்’ ஜகதீஷ் சந்திரபோஸ்தான். சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்தவர். ஊதிய விகிதம்தான் என்பதில்லை. இவர் மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சி
களுக்கும் ஆய்வகங்களைப் பயன்படுத்த இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. லண்டனில் படித்தபோதுதான் இந்நிலை என்றில்லை. இந்தியா திரும்பிய பிறகும் இதே நிலைதான். தனது வீட்டிலேயே தான் உருவாக்கிய சிறிய ஆய்வகத்தில்தான் இவர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இப்படிப்பட்ட குறைவான வாய்ப்புகளுடன் இவர் சாதித்தவை ஏராளம். மார்கோனி வானொலியைக் கண்டறிவதற்கு முன்னரே மின்காந்த அலைகளை கடத்தும் கடத்திகளை இவர் வடிவமைத்திருந்தார். தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை விளக்க கிரிஸ்கோகிராஃப் என்ற கருவியை வடிவமைத்தார். இதை விளக்கச் சென்றபோதுகூட இவருக்குச் சரியான அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை.

அறிஞர்களின் ஆசான்!

இவ்வாறான பல்வேறு சோதனைகளைக் கடந்துவந்தவர் பல்வேறு அறிவியல் அறிஞர்களான சத்யேந்திர நாத் போஸ், மேகநாத் சாஹா, மஹலனோபிஸ் போன்றவர்களின் பேராசானும் ஆவார். இந்தியாவில் அறிவியல் துறை வளம்பெற வேண்டி இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தோடு (Indian Association for cultivation of Science) தொடர்பு கொண்டார் ஜகதீச சந்திரபோஸ். பல்வேறு உரைகளையும் நிகழ்த்தி அதன் வளர்ச்சிக்கும் கை கொடுத்தார். சந்திரனின் ஒரு பகுதி இன்றும் இவரது பெயரைத் தாங்கி உள்ளது.
மாணவர்களுக்கு சுயமரியாதை உணர்வு அதிகம் தேவை. மரியாதைக்கு உரியவர் என்பதை உங்களுடைய நடத்தையிலேயே வெளிப்படுத்த வேண்டும். சந்திரபோசைக் கவனியுங்களேன்! தமக்கு உணர்வுப் பூர்வமாக ஏற்பட்ட மரியாதைக் குறைவுக்கு எவ்வளவு புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு இருக்கிறார். அதே நேரம் பொருளாதார ரீதியான இழப்பீட்டிற்கு இடம் கொடுக்காமல் தமது பணியை திறம்பட செய்து காட்டினார். தாம் யாருக்கும் குறைவானவர் அல்ல என்பதை நிறுவச் சிறிது காலம் எடுத்துக்கொண்டார். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் பிரித்தறிந்து சுயமரியாதையைக் காத்துக்கொள்ள வேண்டும்.

- கட்டுரையாளர், பள்ளி தலைமையாசிரியர்,
தமிழ்நாடு அறிவியல் கழகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x