Published : 11 Nov 2019 09:58 AM
Last Updated : 11 Nov 2019 09:58 AM

தேர்வுக்குத் தயாரா?- வெற்றிநடை போடலாம் வாங்க!

எஸ்.எஸ்.லெனின்

இரண்டாம் பருவத் தேர்வுக்காக பள்ளி மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக தயாராகும் நேரம் இது. அதிலும் அரசு பொதுத் தேர்வு
எழுத காத்திருக்கும் 8, 10, 11மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சற்று கூடுதல் பதைபதைப்பு இருக்கும். அவர்களின் பதற்றத்தை குறைத்துத் தேர்வு சுமைக்கு தோள்கொடுக்க ’தேர்வுக்குத் தயாரா?’ வருகிறது.

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையிலான வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன.

வகுப்பு வாரியாக, பாட வாரியாக அவசியமான வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு நோக்கிலான உதவிகளைத் தலைசிறந்த ஆசிரிய வல்லுநர்கள் உதவியுடன் வழங்க இருக்கிறோம். நூற்றுக்கு நூறு மதிப்பெண்எடுப்பதை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமன்றி, சராசரி மற்றும் மெல்ல கற்கும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு உதவிக்குறிப்புகளும் இந்த வழிகாட்டுதல்களில் அடங்கும்.

எனவே பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் அனைவரும் தங்களுக்கான வழிகாட்டுதல்களை அடையாளம் கண்டு, அவற்றை சக மாணவர்களுடன் விவாதித்து பயன் பெறலாம். தேர்வு நோக்கிலான வழிகாட்டுதல்களுடன், பாடங்களை படிப்பது, நினைவில் நிறுத்துவது, ஐயங்கள் போக்குவது, திருப்புதல் மேற்கொள்வது, பாடங்களின் கடினப் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றை எளிமையாக்குவது என இதரவழிகாட்டுதல்களும் இணைந்து வரஇருக்கின்றன. எனவே தேர்வுக்கான பொதுவான இந்த வழிகாட்டுதல்களை தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களுமே பின்பற்றலாம்.

1) தொடக்கம் இனிதாகட்டும்

நல்ல தொடக்கம் என்பது பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் ஆண்டு முழுக்க மேம்போக்காகப் படித்துவிட்டு தேர்வு நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள். தேர்வு நெருக்கடியில் படிப்பது பதற்றத்தை அதிகரிக்கும். மேலும் தேர்வுக்கு நெருக்கமான தினங்களைத் திருப்புதலுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். அப்போது புதிதாகப் படிப்பது தேர்வை கடினமாக மாற்றுவதுடன், ஏனைய பாடங்களை திருப்புதல் செய்யும் நேரத்தையும் அபகரித்துவிடும். எனவே நல்ல நேரத்திற்கு காத்திருக்காமல், இன்றே இப்போதிலிருந்தே தேர்வுக்கான தயாரிப்பை தொடங்குவோம்.

2) தொடக்கம் இனிதாகட்டும்

நல்ல தொடக்கம் என்பது பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் ஆண்டு முழுக்க மேம்போக்காகப் படித்துவிட்டு தேர்வு நேரத்தில் விழுந்து விழுந்து படிப்பார்கள். தேர்வு நெருக்கடியில் படிப்பது பதற்றத்தை அதிகரிக்கும். மேலும் தேர்வுக்கு நெருக்கமான தினங்களைத் திருப்புதலுக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். அப்போது புதிதாகப் படிப்பது தேர்வை கடினமாக மாற்றுவதுடன், ஏனைய பாடங்களை திருப்புதல் செய்யும் நேரத்தையும் அபகரித்துவிடும். எனவே நல்ல நேரத்திற்கு காத்திருக்காமல், இன்றே இப்போதிலிருந்தே தேர்வுக்கான தயாரிப்பை தொடங்குவோம்.

3) வழி காட்டும் வகுப்பறை

கல்வியாண்டின் இறுதியில் பொதுத் தேர்வு அமைந்தாலும், அதற்கான தயாரிப்பு என்பது நமது அன்றாட வகுப்பறை செயல்பாடுகளில் இருந்தே தொடங்குகிறது. அன்றாடம் ஆசிரியர் நடத்தவிருக்கும் பாடங்களை முன் தினமே ஒருமுறை வாசித்துவிட்டு வகுப்பறைக்கு வருவது எப்போதும் நல்லது. அதிலும் புதிய வார்த்தைகள், புரியாத கருத்துக்கள் போன்றவற்றை அடிக்கோடிட்டு அடையாளப்படுத்தும் பழக்கம், பாடங்களை ஆர்வத்துடன் ஊன்றி கவனிக்க உதவும். அடுத்ததாக அந்த ஐயங்களை ஆசிரியரிடம் உடனுக்குடன் போக்கிக் கொள்ளவும் உதவும்.

முடிந்தவரை அன்றாடம் வகுப்பறையில் நடத்தப்பட்ட பாடத்தை அன்று மாலை அல்லது இரவிலேயே படித்து முடிப்பது நல்ல பழக்கம். வேறு பாடம் தொடர்பான பணிகள் இடையூறாக இருப்பின், வார இறுதியில் கிடைக்கும் விடுமுறை தினங்களில் எப்படி
யும் அவற்றை படித்து முடிக்க வேண்டும். இந்தப் பழக்கம் பாடங்களின் சுமையை சுலபமாக்கும். மேலும் தன்னம்பிக்கையை அதிகமாக்கி கூடுதல் ஆர்வத்துடன் இதர பாடங்களைப் படிப்பதற்கான உந்துதலைத் தரும்.

4) வகுப்புத் தேர்வுகளும் திருப்புதலும்

டிசம்பர் மாதம் வந்தால் தினசரி பல வகுப்புத் தேர்வுகள் வந்துவிடும். வகுப்பறையில் வைக்கப்படும் இந்த சிறு தேர்வுகள் ஆண்டு இறுதியில் எழுதும் பெரிய தேர்வுக்கு வரமாய் உதவும். எனவே வகுப்புத் தேர்வுதானே என அன்றாடம் நடக்கும் சிறு தேர்வுகளை மாணவர்கள் அலட்சியம் காட்டாது எழுதிப் பழகுவது நல்லது. மேலும் மனப்பாடப் பயிற்சி, கையெழுத்து பயிற்சி, குறித்த நேரத்தில் எழுதுவது போன்ற திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் வகுப்புத் தேர்வுகள் உதவும்.

படிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குத் தொடர்ச்சியான திருப்புதலும் அவசியம். சிலர் நன்றாகப் படிப்பார்கள். ‘ஆஹா.. படித்துவிட்டேனே’ என்று அலட்சியமாகி அதன் பின்னர் திருப்புதலே செய்யாமல் விட்டுவிடுவார்கள். தேர்வு நேரத்தில் அந்தப் பாடத்தை எடுத்து படித்தால் புதிதாக படிக்க வேண்டியது போல சவாலாக இருக்கும். எனவே எப்போதும் புதிதாகப்
பாடங்களை படிக்க உரிய நேரத்தை ஒதுக்குவது போலவே, அதுவரையில் படித்தவற்றைத் திருப்பி பார்க்கவும் அவ்வப்போது நேரம் ஒதுக்க வேண்டும். திருப்புதலும் பாடங்களைப் பொறுத்து வெவ்வேறு முறையில் செய்ய வேண்டியிருக்கும். சில பாடங்களை வாய்விட்டு படித்தாலே போதும் என்ற வகையில் எளிமையாக மனதில் தங்கிவிடும். வேறு சில பாடங்களோ அடிக்கடி எழுதிப் பார்த்தால் மட்டுமே முழுமையாகும்.

5) திட்டமிட்டு படிப்போம்

பள்ளியின் பாட வேளைகள், தேர்வு அட்டவணைகள் அனைத்தும் அவற்றுக்குரிய திட்டமிடல்களை சரியாக பின்பற்றுவதை கவனித்திருப்பீர்கள். அதுபோலவே மாணவர்களின் அன்றாட வீட்டுப்பாடம், படிப்பது, திருப்புதல் செய்வது, எழுதிப் பார்ப்பது, மாதிரி தேர்வு எழுதுவது ஆகியவற்றுக்கும் திட்டமிடுதல் அவசியம். வகுப்பு நடைமுறைகளுக்கு ’டைம் டேபிள்’ என்னும் கால அட்டவணையை பின்பற்றுவீர்கள் அல்லவா? அதே போன்ற ஓர் அட்டவணையை வீட்டில் படிப்பதற்கும் வகுத்துக்கொண்டு அன்றாட படிப்பை தொடரலாம். தேர்வு நெருக்கத்தில் அதற்கு ஏற்றவாறும் இந்த வீட்டு ‘டைம் டேபிளி’ல் மாற்றங்கள் செய்து
கொள்ளலாம்.

இவை அனைத்துக்கும் அப்பால், நேர மேலாண்மையை முறையாகப் பின்பற்றுவது, படம் வரைவது, கணக்கீடுகளை செய்வது என பாடங்களைப் பொறுத்து வெவ்வேறு அணுகுமுறைகளில் படித்து தன்னம்பிக்கை பெறுவது குறித்து வரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம்.

பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்குத் தயாராகும் வழிகாட்டுதல்களைப் பாட வாரியாக நாளை முதல் பார்க்கத் தொடங்குவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x