Published : 11 Nov 2019 09:50 AM
Last Updated : 11 Nov 2019 09:50 AM

நிகழ்வுகள்: நவம்பர் 14- குழந்தைகள் நாள்

உலக நிமோனியா நாள்- நவம்பர் 12

ஐ.நா. சபையின் துணை அமைப்பான உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று உலக நிமோனியா நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்று 2009-ல் அறிவித்தது. உலகில் ஐந்து வயதுக்குட்பட்டக் குழந்தைகளின் உயிரையே பறிக்கும் நோய்களில் நிமோனியா முதல் இடம் வகிக்கிறது. குறிப்பாக ஏழைக் குழந்தைகளே அதிகமாக இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். வரும் முன் தவிர்த்து மீறி வந்துவிட்டாலும் உரிய நேரத்தில் சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோய்தான் நிமோனியா. இந்த நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் குணப்படுத்துவதற்கான அறிவியல்
பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து நிமோனியா நோயின் தாக்கத்தை குறைப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.

செவ்வாயின் சுற்றுப்பாதையை தொட்ட முதல் விண்கலம்- நவம்பர் 13

அமெரிக்க விண்வெளி துளாவியான (Space Probe) ‘மரைனர் 9’ (Mariner 9) செவ்வாய் கோளை நோக்கி விண்வெளியில் 1971 மே 30 அன்று செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 13 அன்று செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையை அடைந்தது. பூமியில் இருந்து மனிதர்களால் அனுப்பப்பட்டு பால்வீதியில் உள்ள வேறொரு கோளின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் விண்கலம் என்ற வரலாற்று சாதனையை ‘மரைனர் 9’ அன்று நிகழ்த்தியது. அதே போல செவ்வாய் கோள் ஆராய்ச்சியில் இது ஒரு மைல் கல். இது நிகழ்ந்து ஒரு மாதத்துக்குள் சோவியத் ரஷ்யா அனுப்பிய மார்ஸ் 2, மார்ஸ் 3 விண்கலங்கள் செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்தன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 2013 டிசம்பரில் அனுப்பிய மங்கள்யான் விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்தது.

குழந்தைகள் நாள்- நவம்பர் 14

சுதந்திரப் போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவாஹர்லால் நேரு 1889 நவம்பர் 14 அன்று பிறந்தார். அவர் குழந்தைகள் மீது மிகுந்த அன்பும் கனிவும் கொண்டிருந்தார். குழந்தைகள்தான் நாளைய இந்தியாவை உருவாக்க போகிறவர்கள் என்றார். அனைத்து குழந்தைகளும் முழுமையான குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் அனைவருக்கும் தரமான உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பணியாற்றினார். நேருவின் மறைவுக்கு முன் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் நவம்பர் 20 குழந்தைகள் நாளாகக் கொண்டாடபட்டு வந்தது. 1964-ல் நேருவின் மறைவுக்குப் பிறகு அவருக்குக் குழந்தைகள் மீது இருந்த அன்பைக் கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாட இந்திய அரசு தீர்மானித்தது.

ஜார்க்கண்ட் மாநிலம் உருவான நாள்- நவம்பர் 15

இந்தியாவில் பிஹாரின் தெற்குப் பகுதியாக இருந்த பகுதிகள் ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 2000 நவம்பர் 15 அன்று ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அளவில் பரப்பளவில் 15-ம் இடமும் மக்கள்தொகையில் 140ம் இடமும் வகிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முக்கிய மொழி இந்தி. தலைநகர் ராஞ்சி. அருவிகள், மலைகள் மற்றும் புனிதத் தலங்கள் நிறைந்த மாநிலம் இது.

- தொகுப்பு: கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x