Published : 11 Nov 2019 07:47 AM
Last Updated : 11 Nov 2019 07:47 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: சுதந்திர இந்தியாவின் முதல் கேப்டன்

பி.எம்.சுதிர்

இந்திய கிரிக்கெட்டில் இன்று சச்சின்,தோனி, விராட் கோலி என்று பலருக்கும் தீவிர ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. இவர்களின் ஒவ்வொரு செயலையும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல்வந்தால் கொதித்து எழுகிறார்கள். தனக்கென்று ஒரு தனி ரசிகர்கூட்டத்தைக் கொண்ட கலாச்சாரத்தை தொடங்கி வைத்த முதல் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்சதத்தை அடித்த லாலா அமர்நாத்தான் (முன்னாள் கிரிக்கெட் வீரர் மொஹீந்தர் அமர்நாத்தின் தந்தையார்) அந்த கிரிக்கெட் வீரர்.

பேட்டிங் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் கெட்டிக்காரரான லாலா அமர்நாத், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். தனக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தால் பெருமகிழ்ச்சி அடைந்த லாலா அமர்நாத், சி.கே.நாயுடுவுக்கு பிறகு அணித் தலைமை தனக்கு வரும் என்று உறுதியாக நம்பினார். அப்படி தனக்கு கேப்டன் பதவி கிடைத்தல், எதிரணியை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்.

இந்தச் சூழலில் 1936-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு விழியநகரம் மகராஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்கோபக்காரரான லாலா கொந்தளித்தார். அவரது இந்த கோபத்தை அதிகரிக்கும் வகையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஒரு சம்பவம் நடந்தது. வழக்கமாக 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் லாலா அமர்நாத்தை 7 விக்கெட்கள் விழுந்த இறகும் பேட்டிங் செய்ய களம் இறக்கவில்லை.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற லாலா அமர்நாத், தனது கால் காப்பை (பேட்) கழற்றி கேப்டன் முன் வீசியெறிந்தார். இந்த நடவடிக்கைக்காக உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார் லாலா அமர்நாத். இந்தியாவில் உள்ள அவரது ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் கொதித்துப் போனார்கள். கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இந்த தொடரில் இந்திய அணி பல போட்டிகளில் தோற்றுப்போக, இந்த கோபம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் கப்பலில் மும்பைக்கு திரும்பியுள்ளார் லாலா அமர்நாத். மும்பை துறைமுகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க ரசிகர்கள் திட்டமிட்டனர். ஆனால் ரசிகர்களும் , லாலா அமர்நாத்தும் சந்தித்துக்கொண்டால் கலவரம் நடக்குமோ என்று பயந்த ஆங்கிலேய அரசு, துறைமுகத்துக்கு வெளியிலேயே கப்பலை நிறுத்தி, ஒரு படகில் லாலா அமர்நாத்தை ஏற்றி ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவங்களால் சில காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தார் லாலா. ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அணியின் கேப்டனாக லாலா அமர்நாத் நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x