Published : 08 Nov 2019 04:03 PM
Last Updated : 08 Nov 2019 04:03 PM

குஜராத் கோரிக்கையால்தான் ஜேஇஇ நுழைவுத்தேர்வில் குஜராத்தி இருந்தது: தேசியத் தேர்வு முகமை விளக்கம்

புதுடெல்லி

குஜராத் கோரிக்கை விடுத்ததால்தான் ஜேஇஇ நுழைவுத்தேர்வில் குஜராத்தி மொழியில் கேள்விகள் கேட்கப்பட்டன என்று தேசியத் தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தார். தனது ட்விட்டர் பதிவில் அவர், ''இத்தனை நாட்கள் வரை நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.

ஆனால் ஆச்சரியமூட்டும் விதமாக தற்போது குஜராத்தி மொழியிலும் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. மற்ற பிராந்திய மொழிகள் மட்டும் ஏன் இதில் நிராகரிக்கப்பட்டுள்ளன? இதற்கு உரிய தீர்வு அளிக்கப்படவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மம்தா எழுப்பிய கேள்விக்கு, ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், ''குஜராத் கோரிக்கை விடுத்ததால்தான் ஜேஇஇ நுழைவுத்தேர்வில் குஜராத்தி மொழியில் கேள்விகள் கேட்கப்பட்டன

2013-ம் ஆண்டில் ஐஐடி நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் மாநில பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்த முன்வரும் மாநிலங்களில், அம்மொழிகளில் மட்டும் கூடுதலாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதை அப்போதே குஜராத் அரசு ஏற்றுக்கொண்டதால் அந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டில் மகாராஷ்டிர அரசும் பொது நுழைவுத்தேர்வை ஏற்றதால் அம்மாநில மொழிகளான மராத்தி, உருது ஆகியவற்றில் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

ஆனால், 2016 ஆம் ஆண்டில் இரு மாநிலங்களும் பொதுத்தேர்விலிருந்து விலகி விட்டன. அதையடுத்து அந்த ஆண்டிலேயே மராத்தி, உருது ஆகிய மொழிகளில் ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்துவது நிறுத்தப்பட்டது.

எனினும் தங்கள் மாநில மொழியில் ஜேஇஇ நுழைவுத்தேர்வைத் தொடர வேண்டும் என்று குஜராத் கோரிக்கை விடுத்தது. அதன் காரணமாகவே குஜராத் பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலகியபோதும், அம்மாநில மொழியில் மட்டும் தொடர்ந்து நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

மற்ற எந்த மாநிலங்களும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு கேள்விகளைத் தங்கள் பிராந்திய மொழிகளில் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ நுழைவுத்தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமைதான் நீட் தேர்வை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x