Published : 08 Nov 2019 12:56 PM
Last Updated : 08 Nov 2019 12:56 PM

குட்டிக் கதை 12: அடுத்தவர்க்கு உதவுவோம்!

காரில் இருந்து இறங்கி பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஜானவிக்கு அந்தத் தாத்தாவிடம் பேச வேண்டும் போல் தோன்றியது.

“தாத்தா, நீங்க இந்த ஒரு மாசமாதான் இங்க கடை போட்டு இருக்கீங்க, அதுக்கு முன்ன எங்க கடை வெச்சிருந்தீங்க?” என்று கேட்டாள் ஜானவி.

அவள் படிக்கும் பள்ளியின் முன்புறம் முறுக்கு, சீடை, வடை போன்றவற்றை மிக நேர்த்தியாகத் தயாரித்து விற்கும் தாத்தாவிடம்தான் ஜானவி பேசிக் கொண்டிருந்தாள்.

“இப்போதான் மொதமொதலா கடை போட்டிருக்கேன் கொழந்த, அது சரி, நீ எந்த வகுப்பு படிக்கற கண்ணு?”

“நான் எட்டாவது படிக்கறேன் தாத்தா, சரி, எனக்கு லேட் ஆச்சு, நான் உள்ளே போறேன்.”

இரண்டு நாட்கள் அந்த தாத்தா வரவில்லை. அதற்குப் பிறகு அவர் வந்த போது “என்ன ஆச்சு தாத்தா, ஏன் ரெண்டு நாள் வரல?”

“என் பேத்திக்கும் உன் வயசுதான் இருக்கும் கண்ணு, அவளுக்கு உடம்பு சரியில்லை, அதான் என்னால வர முடியல”

“ஏன் தாத்தா, உங்க கூட வேற யாரும் இல்லையா?

“என் மனைவி இருபது வருஷத்திற்கு முன்ன இறந்துட்டாங்க. நான், பையன், மருமகள், பேத்தி எல்லோரும் ஒண்ணா இருந்தோம். மூணு மாசத்துக்கு முன்ன என் பையனும், மருமகளும் கொத்தனார் வேலைக்குப் போனாங்க, அங்க சுவர் இடிஞ்சு விழுந்து ரெண்டு பேரும் ஒரே நேரத்தில இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகு ஏதோ எனக்குத் தெரிஞ்ச முறுக்கு, சீடையை வீட்டுல செஞ்சு, அதை வித்து என் பேத்தியைக் காப்பாத்திக்கிட்டு வர்றேன் கண்ணு” என்றார்.

இதைக் கேட்ட ஜானவிக்கு மிக வருத்தமாய் இருந்தது. இந்த தாத்தாவிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தாள். ஆனால் என்ன செய்வது எனப் புரியவில்லை.

மறுநாள் பள்ளிக்கு வந்த போது “நேத்து நீங்க சொன்னீங்களே, உங்க பையனும் மருமகளும் இறந்ததுக்கு நஷ்ட ஈடு ஏதாவது தந்தாங்களா, தாத்தா?”

“அடக்கம் செய்யறதுக்கு மட்டும் 5000 ரூபாய் தந்தாங்க. அவ்ளோதான், பையனும் மருமகளுமே போய்ட்டாங்க, அப்பறம் என்ன வந்து என்ன ஆகப்போகுது மா” என்று வருத்தத்துடன் சொன்னார்.

“சரி தாத்தா” என்று சொல்லி விட்டுச் சென்றாள் ஜானவி.

பத்து, பதினைந்து நாட்கள் சென்றன. அதற்குப் பிறகு அந்த தாத்தாவைக் காணவில்லை. என்ன ஆயிற்று என்றும் தெரியவில்லை.

ஒரு வாரம் கழித்து மாலை பள்ளி விடும் நேரத்திற்கு வந்தார் அந்த தாத்தா. “என்ன ஆச்சு தாத்தா, பத்து நாளா உங்களைப் பாக்க முடியலை”

“ஒரு அதிசயம் நடந்துது கண்ணு, திடீர்னு ஒரு நாள் என் வீட்டை தேடிக் கிட்டு ஒரு வக்கீல் வந்தார். என் மகனும் மருமகளும் இறந்ததுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தர்றேன்னு சொன்னார். கோர்ட், கேசுன்னு என்கிட்ட இருந்து காசு புடுங்குவாரோன்னு பயந்து போய் எனக்கு எதுவும் வேணாம்னு சொன்னேன். ஆனா அவர் என் கிட்ட கையெழுத்தும், மத்த விவரங்களையும் கேட்டு வாங்கிட்டுப் போனார்.

மறுநாள் வந்து என்னை அந்த கான்ட்ராக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனார். அவர் பக்கத்துலயே இருந்து ரூ.75,000 நஷ்ட ஈடு வாங்கி, அதை என் பேத்தி பெயர்ல பேங்க்ல போட்டார். இதுக்கெல்லாம் அவர் கூடப் போனதாலதான் இங்க வர முடியலை. அது மட்டும் இல்லாம அவர் வீட்டுத் தோட்டத்தை பார்த்துக்கச் சொல்லி எனக்கு வேலையும் கொடுத்து இருக்கார். நாளைக்கு அவர் வீட்டுக்குப் போகப் போறேன். அங்க இருக்கற தோட்டத்து அவுட் ஹவுஸ்லயே தங்கிக்கவும் சொல்லிட்டார்.

அவர் யாரு, எவர்னு கூடத் தெரியல. எனக்கு ஏன் அவர் உதவி செய்யறாருன்னும் புரியல கண்ணு. நீ என்கிட்ட தினமும் ஏதாவது வாங்குவயே, அதான் உன்கிட்ட சொல்லிட்டுப் போகணும்னு வந்தேன்” என்று சொன்னார்.

அப்போது ஜானவியை அழைத்துச் செல்ல வந்த காரில் இருந்து அந்த வக்கீல் இறங்கினார். “அப்பா” என்று அழைத்துக் கொண்டு அவரிடம் சென்றாள் ஜானவி. தாத்தாவிற்கு ஓரே ஆச்சரியம். “அம்மா, கொழந்த, இதெல்லாம் உன் வேலை தானா? நீதான் உன் அப்பாகிட்ட சொல்லி எனக்கு உதவி செஞ்சியா, என் செல்லமே, உனக்குக் கோடி நன்றி கண்ணு” என்று கூறி கண் கலங்கி கை கூப்பினார்.

ஜானவி தாத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “விடுங்க தாத்தா, இனிமேலாவது நீங்க நிம்மதியா இருங்க” என்றாள்.

நீதி: கஷ்டப்படுபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x