Published : 08 Nov 2019 11:04 AM
Last Updated : 08 Nov 2019 11:04 AM

ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ்

சென்னை

ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.8) வெளியிட்ட அறிக்கையில், "ஐஐடி என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலத்துடன் குஜராத்தி மாநில மொழியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எதிரான இந்த சமூக அநீதியை நியாயப்படுத்த தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனாலும், அதை ஏற்றுக் கொள்ளாத மத்திய அரசு, 2013 ஆம் ஆண்டு முதல் குஜராத்தி மாநில மொழியில் மட்டும் நுழைவுத்தேர்வுகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு, இத்தேர்வுகளை இப்போது நடத்தும் தேசியத் தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்த முன்வரும் மாநிலங்களின் மொழிகளில் மட்டும் கூடுதலாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று 2013 ஆம் ஆண்டில் இந்தத் தேர்வுகளை நடத்திய சிபிஎஸ்இ அறிவித்தது.

அதை அந்த ஆண்டிலேயே குஜராத் அரசு ஏற்றுக்கொண்டதால் அந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் மகாராஷ்டிர அரசும் பொது நுழைவுத்தேர்வை ஏற்றதால் அம்மாநில மொழிகளான மராத்தி, உருது ஆகிய மொழிகளிலும் ஐஐடி நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

ஆனால், 2016 ஆம் ஆண்டில் இரு மாநிலங்களும் பொதுத்தேர்விலிருந்து விலகி விட்டன. அதையடுத்து அந்த ஆண்டிலேயே மராத்தி, உருது ஆகிய மொழிகளில் ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்துவதை சிபிஎஸ்இ நிறுத்தி விட்டது.

ஆனால், குஜராத் பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலகிவிட்ட போதிலும், அம்மாநில மொழியில் மட்டும் தொடர்ந்து நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தங்கள் மாநில மொழியில் ஐஐடி நுழைவுத்தேர்வைத் தொடரும்படி குஜராத் கோரியதே இதற்குக் காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு இந்தத் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமை பதிலளித்துள்ளது.

தேசியத் தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் மிகவும் அபத்தமானது ஆகும். ஐஐடி நுழைவுத்தேர்வு தங்கள் மாநில மொழியிலும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்களின் கோரிக்கை ஆகும். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஐஐடி நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்; எந்தெந்த மாநில அரசுகள் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கின்றனவோ, அந்த மாநில மொழிகளில் மட்டும்தான் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

இது கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதிக்கும் என்பதால்தான் இந்த நிபந்தனையை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், 18.12.2012 அன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த நிபந்தனையைக் கண்டித்த நான், எந்த நிபந்தனையும் இன்றி தமிழ் மொழியிலும் ஐஐடி நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

அதன்பின்னர் 2016 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலகிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வுகளை நிறுத்திய சிபிஎஸ்இ, குஜராத்தி மொழியில் மட்டும் தொடர்ந்து ஐஐடி நுழைவுத்தேர்வுகளை நடத்தியது தவறு.

மாநில மொழிகளில் ஐஐடி நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென்றால், அந்தத் தேர்வுகளை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கான பொது நுழைவுத்தேர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டு, குஜராத் மாநிலத்திற்கு மட்டும் நிபந்தனையைத் தளர்த்தியது எந்த வகையில் நியாயம்?

அதுமட்டுமின்றி, குஜராத் மாநிலம் கேட்டுக் கொண்டதால் அந்த மாநில மொழியில் மட்டும் ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்துகிறோம்; மற்ற மாநிலங்கள் கேட்காததால் அந்த மாநிலங்களின் மொழிகளில் ஐஐடி நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை என்று தேசியத் தேர்வு முகமை கூறுவது பெரும் மோசடி ஆகும்.

2016 ஆம் ஆண்டில் நிபந்தனைகளைத் தளர்த்தி குஜராத்தி மொழியில் மட்டும் ஐஐடி நுழைவுத்தேர்வுகளை நடத்த ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ, தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் எந்தெந்த மாநில மொழிகளில் ஐஐடி நுழைவுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் கேட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மாநில அரசுகள் மீது தேசிய தேர்வு முகமை பழிபோடுவது தவறு.

ஐஐடி நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமகவின் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி பத்தாண்டுகளுக்கு முன்பே வழக்குத் தொடர்ந்துள்ளார். அவ்வழக்கில் சிபிஎஸ்இ அமைப்பும் எதிர்வாதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

மாநில மொழிகளில் நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்திருந்தால், அது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் மூலம் தமிழர்களுக்கு சிபிஎஸ்இ பெருந்துரோகத்தை இழைத்தது.

இப்போதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு அனைத்து மாநில மொழிகளிலும் ஐஐடி நுழைவுத்தேர்வை நடத்துவதுதான். ஆனால், தேசிய தேர்வு முகமை அதன் தவறை மறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு முதல் குஜராத்தி மொழியில் தேர்வு நடத்துவதை நிறுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அது சரியல்ல.

இதே தேசிய தேர்வு முகமைதான் நீட் தேர்வை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்துகிறது. அதேபோல், ஐஐடி நுழைவுத்தேர்வையும் 10 மொழிகளில் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே 2020 ஆம் ஆண்டிலிருந்து ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x