Published : 07 Nov 2019 08:42 AM
Last Updated : 07 Nov 2019 08:42 AM

நவ 7: பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சில முக்கியத் தகவல்கள்

சி.கண்ணன்

இன்றைய பச்சிளம் குழந்தைகள், நாளைய இந்திய குடிமகன்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் வருங்கால எதிர்காலமான பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்து, ஊக்குவித்து, வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 7-ம் தேதி “பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது.

முதல் 28 நாள் முக்கியம்

குழந்தை பிறந்த முதல் 28 நாட்கள் முக்கியமான காலக் கட்டமாகும். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அதிகமான இறப்பு இரண்டுக்கும் சாத்தியம் உள்ள காலம் இது கட்டம் உள்ளது. இந்திய அளவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 33 குழந்தைகளும், தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 16 குழந்தைகளும் ஓராண்டுக்குள் இறக்கின்றன. இதில், பெரும்பாலான குழந்தைகளின் இறப்பு முதல் வாரத்தில் நிகழ்கிறது.

தாய்ப்பால் தொடர்வது அவசியம்

ஆரம்பத்தில் 1 மணி முதல் 2 மணி நேர இடைவெளியிலும், பின்னர் 2 மணி முதல் 3 மணி நேர இடைவெளியிலும் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையை ஒவ்வொரு முறையும் கவனமாக தூக்கி தாய் தனது கையில் வைத்து கொண்டு மற்றொரு கையால் குழந்தையின் கன்னத்தைத் தொட்டு, திருப்பி, பால் கொடுக்கலாம். எப்போதும் உட்கார்ந்து கொண்டே பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு பால் கொடுத்தால் குழந்தை சரியாக பால் குடிக்காது. குழந்தைக்கு புரை ஏறுவதற்கு வாய்ப்புள்ளது. குழந்தையை கவனமாக குளிக்க வைக்க வேண்டும். தொப்புள் கொடி குழந்தையின் உடலில் ஒட்டி இருக்கும், மருத்துவர் ஆலோசனையின்படி தேவையான மருந்துகளை பின்பற்ற வேண்டும். வயிற்றில் அழுத்தம் கொடுக்காத ஆடைகளை குழந்தைக்கு அணிவிக்க வேண்டும்.

குழந்தைகளை தொட விடாதீர்கள்

தொப்புள் கொடி விழுவதற்கு முன் குழந்தையை தண்ணீரில் மூழ்கி எடுக்க கூடாது. குழந்தைக்கு தளர்ச்சியான, பருத்தி உடையை அணி விக்க வேண்டும். சட்டையின் முன் பகுதியில் திறப்பு இருக்க வேண்டும். நாப்பின்கள் பெரிய சதுர வடிவில் தண்ணீர் உறிஞ்சக் கூடிய துணிகளால் இருக்க வேண்டும். குளிர்காலங்களில் உல்லன், சணல் துணி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். நோய் தொற்றுள்ளவர்கள் குழந்தையை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

தாயின் அரவணைப்பு அவசியம்

தாயின் உடலோடு குழந்தை அரவணைப்பில் இருக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டத் தொடங்க வேண்டும். பிறந்த குழந்தை ஒரு நிமிடத்தில் தானே சுவாசிக்கத் தொடங்கவில்லை என்றால், செயற்கை முறையில் சுவாசம் அளிக்க வேண்டும். குழந்தை பிறந்து முதல் மணி நேரத்தில், கண் பராமரிப்பு, உயிர்ச்சத்து மற்றும் பரிந்துரைக்கப்பட்டத் தடுப்புமருந்துகள் கொடுக்க வேண்டும். குழந்தை எடை, கர்ப்ப கால வயது, பிறவிக் குறைபாடுகள், நோய்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட வேண்டும்.

கைகளை சுத்தமாக கழுவுங்கள்

குழந்தையை பராமரிக்கும் போது கண்டிப்பாக சரியான முறையில் கைகளை கழுவ வேண்டும். குழந்தையை மல்லாக்க படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் வெப்பநிலை, சுவாசம், இதய துடிப்பு, எடை உணவூட்டல், நடத்தைகள், மலம், சிறுநீர், தூக்கத்தின் தன்மை இவற்றை தினமும் கணக்கிட வேண்டும். வாய், கண்கள், காதுகள், மற்றும் தோலில் ஏதாவது நோய் தொற்று உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தைக்கு முறையாக தடுப்பூசிகளை போட வேண்டும்.

குழந்தைக்கு என்ன தேவை?

இயற்கை வழி பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கதகதப்பு, இயல்பான சுவாசம், தாய்ப்பால், தொற்றுத் தடுப்பு ஆகியவையே முக்கியமானவை. பிறந்த குழந்தைக்கு உடனடியாக தகுந்தப் பராமரிப்பை அளிக்க வேண்டும். பிறந்த குழந்தையை உடனடியாக முழுமையாக சுத்தப்படுத்தி உலர வைக்க வேண்டும். தொப்புள் கொடியை அகற்ற வேண்டும்.

குழந்தை இறக்க காரணங்கள்

குறைப் பிரசவத்தில் 35 சதவீதம், பிறப்பின் போது சிக்கல் மற்றும் மூச்சுத் திணறலில் 20 சதவீதம், கடும் நோய் தொற்றால் 25 சதவீதம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. பச்சிளம் குழந்தைகளின் இறப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆப்பிரிக்காவில் இறப்பு அதிகம்

உலக அளவில் 2017-ம் ஆண்டில் பிறந்து ஓராண்டுக்குள் 41 லட்சம் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 51 குழந்தைகள் இறக்கின்றன. குறைந்தபட்சமாக ஐரோப்பிய யூனியனில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 8 குழந்தைகள் உயிரிழக்கின்றன.

இறப்பு கணிசமாகக் குறைந்தது

உலக அளவில் 1990-ம் ஆண்டு பிறந்த சில நாட்களில் 1,000 குழந்தைகளில் 65 சதவீத குழந்தைகள் இறந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 29 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல், 1990-ம் ஆண்டு 88 லட்சமாக இறந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பு சதவீதம், 2017-ம் ஆண்டில் 41 லட்சமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் நிலைமை

மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வறிக்கையின்படி 2016-ம் ஆண்டின் இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் சராசரியாக 34 குழந்தைகள் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 47, அசாம் மற்றும் ஒடிசாவில் 44, உத்தரபிரதேசத்தில் 43, குறைந்தப்பட்சமாக கோவாவில் 8, புதுச்சேரியில் 10, மணிப்பூரில் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x