Published : 07 Nov 2019 08:28 AM
Last Updated : 07 Nov 2019 08:28 AM

மாணவர்கள் உருவாக்கிய ‘நஞ்சில்லா காய்கறி தோட்டம்’

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தங்களின் மதிய உணவிற்கான காய்கறிகளை, இயற்கை முறையில், தாங்களே விளைவித்து முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் மாணவர்கள். ‘நஞ்சில்லாக் காய்கறித் தோட்டம்’ என்ற பெயரிலான இந்த திட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில், பல பள்ளிகளில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அக்னிபாவி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் தொடங்கிய இத்திட்டம் விளாங்கோம்பை, குன்றி உள்ளிட்ட குழந்தைத்தொழிலாளர் பள்ளிகளுக்கும் விரிந்தது.

இந்த திட்டத்தின் பலன், சமவெளியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் பரவியுள்ளது. சத்தியமங்கலம் அருகேயுள்ள குந்தி பொம்மனூர் மற்றும் நடுப்பாளையம் உள்ளிட்ட பல அரசுப் பள்ளிகளில், நஞ்சில்லாக் காய்கறித் தோட்டங்கள் பசுமையோடு பளிச்சிடுகின்றன. தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்தரிக்காய், கொத்தவரை, மிளகாய், கீரை மற்றும் பந்தல் காய்கறிகள் இந்த தோட்டங்களில் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இத் தோட்டங்களில் குழந்தைகள் தினமும் ஒரு பாடப் பிரிவில் பணிசெய்வர். இங்கு விளைந்த காய்கறிகள்,மதிய உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் இயற்கை வேளாண் நுட்பங்களை நன்கு அறிவதோடு, உடலுழைப்பு, உடற்பயிற்சியாகயும் அமைகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் கூறியதாவது:

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்'நஞ்சில்லா காய்கறித் தோட்டம்' அமைக்கும் திட்டத்தை தொடங்கினோம். மலைக்கிராமப் பள்ளியில் தொடங்கிய இந்த திட்டம், சுற்றுச்சூழல் சங்கம், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பால், பல பள்ளிகளுக்கு விரிவடைந்தது. மாவட்டத்தில் 200 அரசு பள்ளிகளில் இயற்கை முறையில் காய்கறித்தோட்டம் அமைக்க நாங்கள் பயிற்சி அளித்தோம். இவற்றில் 110 பள்ளிகளில் நஞ்சில்லா காய்கறித் தோட்டங்கள் அமைந்தன. அப்பள்ளிகளின் சத்துணவு தேவைக்கு, மாணவர்களின் உழைப்பால் விளைந்த காய்கறிகள் பயன்படுத்தப்பட்டன.

அதோடு, நாட்டுக் காய்கறிகளின் விதைகளை கலப்படமில்லாமல் பாதுகாக்கவும் இந்த தோட்டம் உதவியது. ஈரோடு நகரின் மையப்பகுதியில் உள்ள இடையன்காட்டு வலசு அரசுபள்ளியில், தோட்டம் அமைக்க இடம்இல்லாத நிலையில், மூன்றாவது மாடி
யில் தோட்டம் அமைத்து திட்டத்தை வெற்றிகரமாக மாணவர்கள் செயல்படுத்தினர்.

இயற்கை முறையில் குறைந்த இடத்தில் அதிக காய்கறிகளை வளர்க்கவும், சத்துணவிற்கு ஆண்டு முழுவதும் சில காய்கறிகள் தேவை என்பதால், அதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்தோம். ஆரம்பத்தில் நாட்டுக் காய்கறி விதைகளை நாங்களே கொடுத்தோம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல், இயற்கை முறையில்இலை, வீணான உணவு, காய்கறி குப்பை, சாணம் கொண்டு இயற்கைஉரம் தயாரித்து, காய்கறித் தோட்டத்திற்கு பயன்படுத்த பயிற்சி அளித்தோம்.

ஒவ்வொரு பள்ளியின் அருகாமையில் வசிக்கும் இயற்கை விவசாயிகளைக் கொண்டு, ஆசிரியர், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க எங்கள் கூட்டமைப்பு தயாராக உள்ளது. இதுபோன்றதிட்டங்களை மாவட்ட ஆட்சியர்,முதன்மைக்கல்வி அலுவலர் ஆகியோர் ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x