Published : 07 Nov 2019 07:48 AM
Last Updated : 07 Nov 2019 07:48 AM

மனநலம் பாதிக்கப்பட்ட 59 பெண்களின் படங்களை வெளியிட்ட டெல்லி அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களின் ஐ.க்யூ மற்றும் படங்களை வெளியிடும் டெல்லி அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து பதில் அளிக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்டள்ளது.

டெல்லியில் உள்ள அரசு ஆஷா கிரண்ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 59 பெண்கள் உள்ளனர். இந்த பெண்களை அவர்களது குடும்பத்தாருடன் ஒப்படைக்கும் முயற்சியில், அவர்களின் விவரங்களை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தது. அதில் 59 பெண்களின் புகைப்படம் மற்றும்அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அறிவுத் திறன் அளவு (ஐ.க்யூ) குறித்து விளம்பரம் செய்யப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களின் ஐ.க்யூ மற்றும் படங்களை விளம்பரம் செய்ததில் உள்நோக்கம் உள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.படேல் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் ஆலோசகர் சஞ்சோய் கோஸ் ஆஜராகி, “பாதிக்கப்பட்ட பெண்களை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம். அதற்காக தான் விளம்பரம் செய்தோம்” என்று விளக்கம் அளித்தார்.

இதற்கு ‘‘புகைப்படம் மூலம்தான் அடையாளம் காண முடியும். ஐ.க்யூ. அளவு மூலம் எப்படி அடையாளம் காண முடியும்?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இதற்கான சரியான காரணத்தை நீதிமன்றத்தில் பதில் மனுவாகசமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் ஐ.க்யூ அளவை வெளியிடுவது, மாற்றுத் திறனாளிகளின் உரிமை (ஆர்.பி.டபிள்யூ.டி) சட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு (யு.என்.சி.ஆர்.பி.டி) தீர்மானத்தை மீறிய செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x