Published : 07 Nov 2019 07:11 AM
Last Updated : 07 Nov 2019 07:11 AM

அரசு பள்ளிகளில் சத்துணவு தரம் மேம்பாடு: காலை சிற்றுண்டியுடன் வழங்க அரசு முடிவு

சி.பிரதாப்

அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரத்தை மேம்படுத்தி, காலை சிற்றுண்டி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் சத்துணவில் மாணவர்களுக்கு பிடித்த,உணவு வகைகளில் மாற்றம் செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 69 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு மதிய வேளையில் ஊட்டச்சத்து நிறைந்த கலவை சாதங்கள், பயறு, முட்டை, வாழைப்பழம், காய்கறிகள் என 13 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்காக ரூ.800 கோடி வரை தமிழக அரசு செலவிடுகிறது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் 12 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 10 கோடி மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்பு செய்கின்றன. 8-ம் வகுப்பு வரை இருக்கும் இந்தத் திட்டத்தை தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான ரூ.4,400 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், தமிழகத்தில் ஏற்கெனவே9, 10-ம் வகுப்புகளுக்கு மாநில அரசின்முழு நிதி பங்களிப்பில் சத்துணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய அரசு மூலம் கிடைக்கவுள்ள கூடுதல் நிதியைக் கொண்டுசத்துணவின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சத்துணவு சாப்பிடும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் விருப்பங்களுக்கு ஏற்ப சத்தான உணவு வகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுதவிர சத்துணவில் காலை சிற்றுண்டி வழங்க முடிவாகியுள்ளது. முதல்கட்டமாக 24,301 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இட்லி, கோதுமை உப்புமா, கேசரி, கேழ்வரகு புட்டு, சவ்வரிசி கஞ்சி என தினமும் 100 கிராம் அளவில் வெவ்வேறு வகை உணவுகள் வழங்கப்படும். இதற்கு ஆண்டுதோறும் ரூ.400 கோடி வரை செலவாகும்.

சத்துணவு மையங்கள் மூலமும் வாய்ப்புள்ள பள்ளிகளுக்கு அம்மா உணவகங்கள் மூலமும் உணவு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஊட்டசத்து குறைபாட்டை போக்க தினமும் பால் (200 மிலி) சேர்த்து வழங்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x