Published : 06 Nov 2019 10:32 AM
Last Updated : 06 Nov 2019 10:32 AM

டைனோசருக்கு முன்பே தோன்றியவை ஜெல்லி மீன்கள்: விஞ்ஞானிகள் தகவல் 

தூத்துக்குடி

டைனோசர் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஜெல்லி மீன்கள், தோன்றியதாக தூத்துக்குடியில் நடைபெற்ற ஜெல்லி மீன்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

உலக ஜெல்லி மீன்கள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் சார்பில் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 'கடல் மீன்வளத்தில் ஜெல்லி மீன்கள் வளமானதா அல்லது தொல்லையானதா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானி பி.பி.மனோஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:

ஜெல்லி மீன்கள் குழியுடலிகள் வகையை சேர்ந்தது. டைனோசர் தோன்றுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவை தோன்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் இருந்து ஜெல்லி மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றார்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் பா.வேலாயுதம் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘கடல் சுற்றுச்சூழலில் ஜெல்லி மீன்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. எனவே, இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.

தூத்துக்குடி மற்றும் திருநெல் வேலி மாவட்டங்களில் உள்ள 5 கல்லூரிகளை சேர்ந்த 25 பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஜெல்லி மீன்களின் வகைகள், அதன் நன்மைகள் குறித்து விஞ்ஞானிகள் சி.காளி தாஸ், எல்.ரஞ்சித், எம்.கவிதா, டி.லிங்கபிரபு ஆகியோர் எடுத்து ரைத்தனர். கடலில் மீன்பிடிக்கும் போது ஜெல்லி மீன்களால் ஏற்பட்ட பாதிப்புகளை திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு போட்டி நடத்தப் பட்டது. இதில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் 2-ம் பரிசையும், தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர்கள் மூன்றாம் பரிசையும் வென்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுபோல் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடை பெற்ற விழாவுக்கு முதல்வர் பா.வேலாயுதம் தலைமை வகித் தார். முதுநிலை மாணவி சிந்து, மீன்வள சுற்றுச்சூழலியல் துறைத் தலைவர் ராணி ஆகியோர் ஜெல்லி மீன்கள் குறித்து பேசினர். திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x